பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது வன்னி தமிழ் மக்களின் கோரிக்கைகளை எழுத்து மூலம் பெற்றுக்கொண்ட பிரமர், மீண்டும் பிரதமரான பின்னர் தமது பிரதேசத்திற்கு வந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பை இழந்தமை தொடர்பில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்த் தாய்மார்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
2025 பெப்ரவரி 16 ஆம் திகதி முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.
மீன்பிடி அமைச்சரின் அழைப்பின் பேரில் பிரதமரை சந்திக்க வந்த போதும் பிரதமரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரை சந்திக்கும் வாய்ப்பை தடுத்ததாக, பூர்வீக நிலத்தை மீட்பதற்காக பல வருடங்களாக போராடி வரும் கேப்பாப்புலவைச் சேர்ந்த விவேகானந்தன் இந்திராணி, முல்லைத்தீவு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
“கடற்றொழில் அமைச்சர் ஒரு மணிக்கு வருமாறும் சந்திக்க முடியுமெனவும் குறிப்பிட்டார். அனுமதி பெற்றுதான் நாங்கள் வந்தோம். இங்கு வந்தால் ஒரு நிமிடமேனும் சந்தித்து, உங்கள் பிரச்சினைகள் என்ன? உங்களுக்கு என்ன நடந்தது என எந்த கதையையும் கேட்கவில்லை. நாங்கள் கடிதம்கூட கொண்டுவரவில்லை, காரணம் கடந்த 2024ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக இவர் புதுக்குடியிருப்பு பகுதிக்கு வந்தபோது கேப்பாப்புலவு மக்களாகிய நாங்கள் இவருக்கு மகஜர் ஒன்றை கையளித்திருந்தோம். ஆகவே தொடர்ந்து மகஜர்களை கொடுத்து ஏமாந்தமையால் நேரில் கதைக்கும் எண்ணத்துடன் வந்தோம். எனினும் ஒரு நிமிடமேனும் சந்திக்க அனுமதிக்கவில்லை.”
முல்லைத்தீவு மாவட்டத்தில், இராணுவத்தினரால் பூர்வீக நிலங்களை பலவந்தமாக கையகப்படுத்தியதன் காரணமாக, சுமார் ஒன்றரை தசாப்தங்களாக காடுகளுக்கு நடுவில் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட கிராமத்தில் சிக்கித் தவித்த தமிழ் மக்கள் குழு உடனடியாக தமது காணிகளை விடுவிக்குமாறு 2024 நவம்பரில் புதிய பிரதமரிடம் கோரியது.
நூற்றுக்கணக்கான ஏக்கர் தமது சொந்த நிலத்தை மீட்டு வாழவும், வாழ்வாதாரத்தை தக்கவைக்கவும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும், முல்லைத்தீவு, கேப்பாபுலவு பிரதேச மக்கள் பொதுத் தேர்தல் பிரச்சாரத்திற்காக முல்லைத்தீவுக்கு வந்திருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் எழுத்து மூலம் இந்த கோரிக்கை விடுத்திருந்தனர்.
மூன்று தசாப்தங்களாக வடக்கில் நடத்தப்பட்ட கொடூரமான உள்நாட்டுப் போர் இரத்தக்களரியுடன் முடிவடைந்த பின்னரும், இலங்கை அரசின் பாதுகாப்புப் படையினரால் தமிழர்களின் காணிகளை பலவந்தமாக கையகப்படுத்தியதன் காரணமாக பூர்வீக நிலங்களை இழந்து வறுமையில் வாடும் தமிழ் மக்கள் இன்னமும் தமது காணிகளைப் பெறுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2025 பெப்ரவரி 16ஆம் திகதி தேர்தல் வெற்றியை கொண்டாடும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்திக்கும் வாய்ப்பை பிரதமரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மறுத்ததாக குற்றம் சுமத்தும் விவேகானந்தன் இந்திராணி, பிரதேச மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பில் எதுவுமே தெரியாத ஒருவர் பிரதமரின் இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
“சிவரூபன் என்ற ஒருவரை இணைப்பாளராக நியமித்துள்ளனர். அவர் அபிவிருத்தி தொடர்பிலேயே கதைக்கின்றார். கேப்பாப்புலவு என்ற வரலாறு வெளிநாடு என எங்கோ எல்லாம் போயுள்ளது. ஆனால் மாவட்ட இணைப்பாளருக்கு கேப்பாப்புலவு காணி பிரச்சினை இருக்கிறது. காணி விடுவிப்பு அதுத் தொடர்பில் எதுவும் தெரியாத ஒருவரை மாவட்ட இணைப்பாளராக போட்டுள்ளனர். அவரிடமும் சந்திப்பதற்கு நாங்கள் ஒரு நிமிடம் கேட்டோம் . எனினும் அவருக்குரிய பாதுகாப்பு படையினர் நீங்கள் போக முடியாது என எங்களை தள்ள ஆரம்பித்தனர். ஆகவே நாங்கள் இன்னமும் ஏமாந்துகொண்டிருக்க முடியாது. எனவே எஞ்சிய இந்த 59 ஏக்கர் காணியை பெறுவதற்கு மக்களாகிய நாங்கள் முன்பு போல் போராட வேண்டும்.”
கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது, தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை பலவந்தமாக அரசாங்க இராணுவம் கையகப்படுத்தியதோடு, ஆயிரக்கணக்கான உயிர்களையும் உடைமைகளையும் அழித்து ஆரம்பிக்கப்பட்ட அந்த போருக்கு தற்போதைய ஜனாதிபதியின் தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியின் பலத்த ஆதரவு கிடைத்தது.
கேப்பாபுலவு மாதிரிக் கிராமத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமது காணிகளை தமக்கு விரைவில் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் திகதி பிரதமரிடம் கடிதம் ஒன்றைக் கையளித்தனர்.
அரச நிலைப்பாட்டின்படி கேப்பாபுலவு கிராமத்து மக்கள் ‘மீள்குடியேற்றம்’ செய்யப்பட்டுள்ளார்கள், ஆனால் உண்மை நிலை என்பது, அந்த நிலத்திற்கு உரிய குடும்பங்கள் தமது சொந்த நிலங்களிலிருந்து வலிந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
எதற்கெடுத்தாலும் ‘தேசியப் பாதுகாப்பு’ என்ற போர்வையில் நடவடிக்கைகளை முன்னெடுத்த மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் 2012 ஆம் ஆண்டு, கேப்பாபுலவு கிராமத்திலிருந்து வலிந்து வெளியேற்றப்பட்ட குடுமங்களை சீனியாமோட்டை என்ற பகுதியில் காட்டை ஓரளவுக்கு சீர் செய்து அங்கு குடியமர்த்தினர்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பரந்துபட்டளவில் நிலங்களை இராணுவம் கபளீகரம் செய்து அங்கு கட்டடங்களை கட்டியுள்ளன. அதன் மூலம் அந்த நிலங்களுக்கு சட்டரீதியாக உரியவர்கள் காட்டுப்பிரதேசத்தில் அவர்களது விருப்பத்திற்கு மாறாக குடியேற்றப்பட்டுள்ளனர்.
கேப்பாபுலவு மக்கள் வலிந்து குடியேற்றப்பட்ட மக்கள் மிகவும் அவலமான ஒரு நிலையில் வாழ்ந்து வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது. அந்த சமயத்தில் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதியாக காலஞ்சென்ற கலாநிதி சுபிநாய் நந்தி இருந்தார்.
உடனடியாக அந்தப் பகுதியைச் சேர்ந்த தனி நபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உரிய 70 ஏக்கர் நிலங்களை விடுவிக்க வேண்டும் என பிரதமரிடம் கடந்த வருடம் நவம்பர் கையளிக்கப்பட்ட கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
“இங்கு 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் காணிகள், 3 நபர்களுக்கு உரிய 11.5 ஏக்கர் காணிகள், 3 நபர்களுக்கு உரிய 75 ஏக்கர் காணிகள் (25 வீட்டுத்திட்டம்), 104 குடும்பங்களுக்கு சொந்தமான 84.5 ஏக்கர் காணிகள், 6 நபர்களுக்கு சொந்தமான 86 ஏக்கர் காணிகள். 9 குடும்பங்களுக்குச் சொந்தமான 25 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். மேலும் கடற்கரையோரப் பிரதேசங்களில் மீனவ சமூகத்தினர் காலங்காலமாக மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதிகள் எல்லாம் கடந்த 50 ஆண்டுகளாக இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது”.
கேப்பாப்புலவு மக்கள் எதிர்கொள்ளும் கடும் சிரமங்கள் ஐ.நா உட்பட பல்வேறு அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த வருடம் பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி, ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பு அவர்களது இன்னல்கள் குறித்து அறிக்கையிட்டிருந்தது.
“உலகத்திற்கு நாங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவிட்டதாக ஒரு பொய் பரப்படுகிறது” என்று உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களில் ஒருவரான 43 வயதை உடைய சிவகுரு ஐங்கரமுத்து உதயகுமாரி மெனிக் பாமில் பேருந்து ஒன்றில் செல்லும் போது, தான் எங்கு கொண்டு செல்லப்படுகிறோம் என்பது தெரியாமலேயே பேருந்தில் அழைத்துச் செல்லப்படுவதாக ஊடக நிறுவனம் ஒன்றிடம் அவர் தெரிவித்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போருக்கு பின்னர் மெனிக் பார்ம் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த அவர்கள் கேப்பாபுலவிலுள்ள தமது சட்டபூர்வமான சொந்த நிலங்களுக்கு அனுப்பப்படுவதற்கு பதிலாக, இலங்கையில் வடமேற்கே உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில், அரசுக்கு சொந்தமான வேறு இடத்திற்கு அனுப்பப்பட்டனர். ஏனென்றால் அவர்களது நிலங்களை இராணுவம் வலிந்து அபகரித்து தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது, எனவே அவர்களால் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியுமா, இல்லையா, அல்லது ஏதாவது இழப்பீடுகள் அவர்களுக்கு இடைக்குமா இல்லையா என்பதை அறிய அவர்கள் காத்திருக்க வேண்டும்” என்று 2102 ஆம் ஆண்டு அவர்கள் தொடர்பிலான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2012 செப்டெம்பர் 24ஆம் திகதி அவர்களை அவர்களது காணிகளில் குடியமர்த்துவதற்குப் பதிலாக, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த தற்போதைய வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் அவர்களை பலவந்தமாக ‘மாதிரி கிராமத்திற்கு’ குடியேற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
“நாங்கள் எமது சொந்த பூமியிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மறுபுறம், எமது சொந்த நிலங்களில் இராண்டும் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். எமது பூர்வீக இடத்தை இராணுவத் தலைமையகமாக அறிவித்துள்ளனர். இத் ஊழல் இல்லையா? முந்தைய இராணுவத் தலைமையகம், இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எமது பூர்வீக நிலம் எப்போது இராணுவத் தலைமையகமாக இருந்தது? மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் எப்படி இராணுவப் பாதுகாப்பு தலைமையகத்தை அமைக்க முடியும்?” என அடுக்கடுக்கான கேள்விகளை பிரதமரிடம் கையளித்த கடிதத்தில் அவர்கள் வினவியிருந்தனர்.
இலங்கையின் அரசாங்கங்கள் தமிழ் மக்களை மீள்குடியேற்றியதாக கூறி சர்வதேச சமூகத்தை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சுமத்துகின்ற தமிழ் மக்கள், சர்வதேச அமைப்புகளால் அடிப்படை உரிமையாக வகைப்படுத்தப்பட்டுள்ள முறையான கழிவறை வசதிகள் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் அக்கிராமங்களில் இல்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாரம்பரிய தமிழர் தாயக காணிகள் படையினர் வசம் காணப்படுவதாக தமிழ் பிரதிநிதிகள் குறிப்பிடுகின்றனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் 1,673 ஏக்கர் தனியார் காணிகளை ஆயுதப்படையினர் இன்னமும் ஆக்கிரமித்துள்ளதாக, 2025 ஜனவரி 31 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் மாவட்டச் செயலாளர் மருததலிங்கம் பிரதீபன் குறிப்பிட்டிருந்தார்.
“இது தான் ஒரு ஜனநாயக நாட்டில் நீதியா?” என பிரதமரிடம் கடந்த வருடம் நவம்பர் 4ஆம் திகதி கையளித்த கடிதத்தில் கேப்பாப்புலவு தமிழர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.