தோட்டத் தொழிலாளர்களை மையப்படுத்தி உருவான ஒரு தேசிய இனம்தான் மலையக மக்கள் எனப்படுவோர்.
தென்னிந்தியாவிலிருந்து இலங்கையின் மத்திய மலைநாட்டில் தேயிலை, கோப்பி, இறப்பர் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள ஆங்கிலேயர் ஆட்சியில் அழைத்துவரப்பட்ட இவர்கள், இன்னமும் தோட்டங்களில் உள்ள லயன் அறைகளில் வாழ்கின்றனர்.
20வீதமான சமூக ஓரளவு மத்திய வருமானம் பெரும் குடும்பங்களாக மாறியுள்ள போதிலும் 80 வீதமான மலையக மக்கள் இன்னமும் தோட்ட லயன் குடியிருப்புகளிலேயே வாழ்கின்றனர்.
200 வருடங்களை இலங்கை நாட்டில் இவர்களின் தலைமுறைகள் விரிவடைந்துள்ள போதிலும் இன்னமும் முகவரி அற்ற ஓர் இனக் குழுமமாக இவர்கள் வாழ்கின்றனர்.
இலங்கையின் அனைத்து அபிவிருத்தியிலும் இவர்களுக்கு பாரபட்சமே காட்டப்படுகிறது.
இந்த மக்கள் மாத்திரம்தான் இன்னமும் வீட்டு முகவரி இல்லாது வாழும் மக்கள். இவர்களுக்கென்று சொந்த வீடு, நிலம் காணி இல்லாமையே இதற்கு காரணம்.
இவர்களுக்கு சொந்த வீடு, காணியை வழங்குவதாக கூறி கடந்தகால அரசாங்கங்கள் ஆசை வார்த்தைகளை கூறியிருந்த போதிலும் குறைந்த அளவான வீடுகளே இவர்களுக்கு கட்டப்படுகின்றன.
கடந்த 1978ஆம் ஆண்டுக்கு பின்னர் வெறும் 15ஆயிரம் வீடுகள் மாத்திரமே மலையக மக்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இவர்களது வீடு தேவை தற்போது 2 இலட்சத்து 60ஆயிரத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் புதிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலையக மக்களுக்கு சொந்த முகவரிகளை கொடுக்கும் பணியை ஆரம்பித்துள்ளது. இவ்வாறு கொடுத்தால் தற்போது அவர்கள் வசிக்கும் பகுதி லயனாக இருந்தால்கூட இவர்களுக்கு அது சொந்தமான நிலப்பகுதியாக கரும் சூழல் உருவாகும்.
”பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களுக்கு வீட்டு முகவரியை பெற்றுக்கொடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.” என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிப்பட்ட முகவரியை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திட்டத்தின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை 260,000 இற்கும் அதிகமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பெருந்தோட்ட மக்களுக்கு தமது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக முகவரிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த காலத்தில் தெரிவித்திருந்தார்.
ஆட்சிமாற்றத்தின் பின்னர் அதற்கான நடவடிக்கைகளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பின்புலத்திலேயே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய அரசாங்கத்தின் நகர்வை மலையக மக்கள் வரவேற்றுள்ளனர்.