ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இன்று செவ்வாக்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதன் மூலம் 109 மேலதிக வாக்குகளால் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதி வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றியிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தமது அரசாங்கத்தின் எதிர்கால பொருளாதார கொள்கைகளையும் தெளிவுபடுத்தியிருந்தார்.
அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு, முதியோர் மற்றும் விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவு அதிகரிப்பு உட்பட பல்வேறு சலுகைகளை ஜனாதிபதி, தமது அரசு செலவுத் திட்டத்தில் அறிவித்திருந்தார்.
18ஆம் திகதி முதல் இன்று 25ஆம் திகதிவரை வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இடம்பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. குழுநிலை விவாதங்களை தொடர்ந்து எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது