உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான களம் இலங்கையில் சூடுபிடித்துள்ளது.
பிரதானக் கட்சிகள் தமது கட்டுப்பணத்தை செலுத்தி வருகின்றன.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள போதிலும், இன்னமும் தேர்தல் திகதி அறிவிக்கப்படவில்லை.
தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 17ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதிக்கு இடையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய முடியும் எனவும் 19ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்தும் முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பாரம்பரியமாக ஐ.தே.கவின் வசமிருக்கும் கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன.
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோஸி சேனநாயக்க, ஐ.தே.கவின் மேயர் வேட்பாளராக மீண்டும் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
என்றாலும், யார் மேயர் வேட்பாளர் என இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்றும் தான் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் ரோஸி சேனநாயக்க கூறியுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக எரான் விக்ரமரத்ன களமிறக்கப்பட உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எரான் விக்ரமரத்ன போட்டியிடவில்லை என்பதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது. என்றாலும், கூட்டணிக் கட்சிகள் தேசிய பட்டியல் ஆசனத்தை கோரியதால் எரான் விக்ரமரத்ன உட்பட அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலருக்கான வாய்ப்பு பறிபோனது.
இந்தப் பின்புலத்திலேயே எரான் விக்ரமரத்னவை மேயர் வேட்பாளராக களமிறக்க ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக சட்டத்தரணி ஒருவரை களமிறக்க பேச்சுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.