கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஏழாம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் மார்க்கம் நகரில் வசித்து வரும் 20 வயதான ரகுதாஸ் நிலக்ஷி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்றும் கொல்லப்பட்டுள்ளதாகவும், 26 வயதான ஆண் ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த பெண் யாழ்ப்பாணத்தின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பாவின் பேத்தி ரகுதாஸ் நிலாக்ஷி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண், யாழ்ப்பாணத்தின் கோண்டாவில் உள்ள மேற்கு கல்வீட்டில் வசித்து வளர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோர்க் பிராந்திய பொலிஸாரின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை காலை 6:30 மணியளவில் நெடுஞ்சாலை 48 மற்றும் காசில்மோர் அவென்யூவிற்கு அருகிலுள்ள சோலஸ் சாலையில் உள்ள வீட்டில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தப் பெண் அந்த வீட்டில் இரண்டு வருடங்களாக வசித்து வந்துள்ளார். அந்த வீட்டின் மீது இதற்கு முன்பு மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஒருமுறையும், மார்ச் மாதத்தில் இருமுறையும் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒவ்வொரு வழக்கிலும், சந்தேக நபர்கள் தூரத்திலிருந்து வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மேலும், புலனாய்வு அமைப்புகளால் சந்தேக நபர்களைக் கைது செய்ய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ரகுதாஸ் நிலக்ஷி கொல்லப்பட்டார், அதே வீட்டில் இருந்த 26 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது காயங்கள் கடுமையானவை ஆனால் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று பொலிஸார் தெரிவித்துள்ளார். வீட்டைக் காவல் காத்துக்கொண்டிருந்த ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயும் துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் டாக்ஸியில் தப்பிச் செல்வதை சிசிடிவி காட்சிகள் காட்டுவதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், இதுவரை எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், இந்த சம்பவம் ஒரு திட்டமிட்ட கொலையாக விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.