இலங்கை பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சியை அனுபவிக்க வேண்டுமானால் அதானி குழுமம் மற்றும் இந்தியாவின் பிற முதலீட்டாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியது கட்டாயம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன எழுதிய “Arthikaye Panchaudaya” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட ரணில் விக்ரமசிங்க,
”இலங்கை இந்திய முதலீட்டாளர்களை ஈர்க்கவும் அழைக்கவும் வேண்டும். அதானியுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது எமது அரசாங்கம் பல்வேறு வகையான மின்சார கொள்முதல் விலைகளை முன்மொழிந்தது.
கொள்முதல் விலையாக 2 முதல் 8 சதங்கள் (அமெரிக்க டொலர்) வரை இருந்தது. தற்போதைய அரசாங்கம் இந்த வரம்பைத் தாண்டிச் சென்றமையால்தான் இத்திட்டத்தில் இருந்து அதானி குழுமம் விலகியுள்ளது.
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்க ஆர்வமாக இருந்த பல முதலீட்டாளர்கள் அதானியின் வருகைக்குப் பிறகு தமது ஆர்வத்தையும் வெளிப்படுத்தினர்.
இலங்கை பொருளாதாரத்தின் வளர்ச்சியை அடைய விரும்பினால், இந்த முதலீட்டாளர்களைப் பாதுகாக்க வேண்டும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் இருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வாங்குவதில் ஆர்வமாக இருப்பதால் நம் கைகளில் ஒரு வாய்ப்பு உள்ளது. நமது பொருளாதாரத்தின் வளர்ச்சியை அடைய இந்தியா மற்றும் அதன் முதலீட்டாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.” என்றார்.