‘பிரித்தானியா செல்ல தடை’ – கருணா அம்மான் பேச்சு

0
6
Article Top Ad

எமது கூட்டமைப்பை கண்டு “வற்றிய குளத்தில் சுங்கான் மீன் கொதிப்பது போல் கொதித்துக் கொண்டிருக்கின்றார்கள்” குறிப்பாக வெளிநாட்டில் இருப்பவர்களும் கொதிக்கின்றார்கள் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கல்குடா தொதியில் அமைந்துள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு நேற்று வியாழக்கிழமை(27.03.2025) கிரான் ரெஜி மண்டபத்தில் இடம்பெற்றது. இங்கு கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

உள்ளுராட்சி மன்ற தேர்தல் எம்மைப் பொறுத்தளவில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. ஏனெனில் நாங்கள் ஒரு கூட்டணியாக இணைந்து கொண்டு இந்த தேர்தலை சந்தித்து இருக்கின்றோம். இதில் ஒவ்வொரு வேட்பாளர்களும் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய அபிப்பிராயமாகும். அதற்கான அனைத்து பின்னணி ஒத்துழைப்புகளையும் நாங்கள் வழங்குவோம். தற்போது எமது கூட்டமைப்பு கூட்டப்பட்டதன் பிற்பாடு அதனை பொறுத்துக் கொள்ள முடியாத பலர் கலக்கமடைந்திருக்கின்றார்கள்.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களில் அனைவரும் இல்லை குறிப்பிட்ட சிலர் கொதிக்கின்றார்கள். வெளிநாடுகளில் வீதிகளிலே இருப்பவர்கள் தான் இவ்வாறு கொதிக்கின்றார்கள். அவர்களுக்கு பொறுத்துக் கொள்ள முடியாமல் இருக்கின்றன.

அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களுடைய தோல்விக்கான அத்திவாரத்தை நாங்கள் இட்டுள்ளோம். முதலில் தோற்கடிக்க வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே. ஏனெனில் போலி தேசியத்தை பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றி அதிக அளவு இலஞ்சம் ஊழல்களில் ஈடுபட்டுள்ளனர்.

எமது கூட்டமைப்பில் வேட்பாளர்களாக உள்ளவர்களுக்குத்தான் மக்களின் தேவைகளும் பிரச்சனைகளும் நன்கு தெரியும். இதிலிருந்து தெரிவு செய்யப்படுகின்றவர்கள்தான் உண்மையிலேயே எமது மக்களை ஆள வேண்டும். அதற்காக வேண்டிதான் நாங்கள் தற்போது இந்த கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். இன்று பரந்துபட்ட அடிப்படையில் எமது கூட்டமைப்பு உலகளாவிய ரீதியில் பேசுபொருளாகி இருக்கின்றது.

பிரித்தானிய அரசாங்கம் கருணா அம்மனுக்கு தடை விதித்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளிவந்திருக்கின்றது. நாங்கள் பிரித்தானியா அரசாங்கத்திடம் என்ன கேட்க போகின்றோம். இதுவரை காலம் இல்லாத தடை நாங்கள் கூட்டுச் சேர்ந்தவுடன் தடை விதித்துள்ளார்கள். உண்மையாகவே மக்களுக்கு தெரியும் இவை அனைத்தும் அரசியலுக்கான ஒரு நாடகமாகும்

1986 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கத்தினால் நான் கைது செய்யப்பட்டு சிறையிலும் இருந்திருக்கின்றேன். சுமார் 08 மாதங்கள் சிறையில் இருந்திருக்கின்றேன். அப்போது கண்டுபிடிக்காத குற்றச்சாட்டை இப்போதுதான் பிரித்தானிய அரசாங்கம் கண்டுபிடித்து இருக்கின்றது. பிரித்தானிய எவ்வாறான அரசாங்கம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இவைகள் அனைத்தும் தமிழர்களுடைய குறிப்பாக கிழக்குத் தமிழர்களுடைய இருப்பை சூறையாடுவதற்கான நடவடிக்கையாகும். கிழக்கு மாகாண சபையை நாங்கள் தவற விடுவோமாக இருந்தால் இன்று இஸ்லாமியர்களின் ஆதிக்கம் வளர்ச்சி அடைந்து தமிழர்களுடைய இருப்புக்கள் நிலப்பிரதேசங்கள் அனைத்தும் குட்டி சுவராக்கப்படும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பற்றி மக்களுக்கு தெரியும் கல்முனை மாநகர சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்து தான் ஆட்சி அமைக்கும் என ஒரு உடன்பாட்டுக்கு சென்று இருக்கின்றார்கள். இது போன்றுதான் கடந்த காலத்தில் கிழக்கில் 11 ஆசனங்களை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எட்டு ஆசனங்களை பெற்ற முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சரை கொடுத்திருந்தது இவர்கள்தான் தற்போது தேசியக் கதைக்கின்றார்கள். இதன் பின்னடைவை நாங்கள் பார்க்கின்ற போது நாங்கள் தனி தமிழ் தரப்பாக வருகின்ற கிழக்கு மாகாண சபையை நாங்கள் கைப்பற்றலாம் .

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மக்கள் அனைவரும் எங்கள் பக்கம்தான் இருக்கின்றார்கள். குறிப்பாக 70 வீத மக்கள் எமது பக்கம்தான் இருக்கிறார்கள். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்தான் வாய்க்கு வந்தபடி கதைக்கின்றார்கள்.

ஆகவே வெற்றியை நிலை நாட்டுவதற்காக ஒவ்வொரு வேட்பாளர்களும் செயற்பட வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here