கட்டளை பிறப்பித்த பொன்சேகா மீது பிரிட்டன் ஏன் தடை விதிக்கவில்லை?

0
6
Article Top Ad

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்குப் பிரித்தானியா தடை விதிக்காமல் இருப்பது சந்தேகத்துக்குரியது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

“யுத்த காலத்தில் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித படுகொலைகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளான சவேந்திர சில்வா, வசந்த கரன்னாகொட மற்றும் ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கு எதிராகப் பிரித்தானியா தடை விதித்துள்ளது.

அதேபோல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய கருணா அம்மானுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா பதவி வகித்தார். அவரது கட்டளைகளையே சவேந்திர சில்வா, ஜகத் ஜயசூரிய ஆகியோர் பதவி நிலை அதிகாரிகள் என்ற அடிப்படையில் செயற்படுத்தினார்கள். அவ்வாறாயின் ஏன் சரத் பொன்சேகாவுக்குப் பிரித்தானியா தடை விதிக்கவில்லை.

விடுதலைப்புலிகள் அமைப்பினர் கடல் மார்க்கமாகத் தப்பிச் செல்வதை அப்போதைய கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவே தடுத்தார்.

1815 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் மனிதப் படுகொலைகளை படுமோசமாக நடத்தி, காடுகளை அழித்து பல்லாயிரக்கணக்கான யானைகளைக் கொன்று, தந்தங்களையும், பெறுமதியான சொத்துக்களையும் கடத்திச் சென்ற பெரிய பிரித்தானியா இன்று மனித உரிமைகள் குறித்து இலங்கைக்குப் பாடம் கற்பிக்கின்றது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கைவாதிகளில் பெருமளவிலானோர் பிரித்தானியாவில் வாழ்கின்றார்கள். அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே பிரித்தானியா தற்போது இந்தத் தடையை விதித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்கள் இன்றும் நாட்டில் உள்ளார்கள்.

பிரித்தானியாவில் தற்போதைய முறையற்ற செயற்பாடு அழிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கு உயிர்ப்பிக்கும் வகையில் உள்ளது. ஏனெனில் கடந்த காலங்களில் நாட்டில் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய தரப்பினர் தேசியத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள். நினைவேந்தல் பகிரங்கமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. பாதுகாப்புத் தரப்பு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here