இலங்கைக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள வரி கொள்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று பேசிய தொழிலாளர் இராஜாங்க அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இந்த தகவலை வெளிப்படுத்தினார்.
இந்தக் கடிதத்தை வெள்ளை மாளிகை பெற்றுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி தனது கடிதத்தில், வரி விதிப்பின் தாக்கத்தைக் குறைப்பதற்கான சாத்தியமான வழிகள் மற்றும் இலங்கை எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வரிகளைக் குறைக்க ஒத்துழைக்குமாறும் அந்த கடிதத்தில் ஜனாதிபதி கோரியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அண்மையில் பரஸ்பர விதிகளை அறிமுகப்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி, இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 வீத வரி விதித்திருந்திருந்தார். அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 88 வீத வரிகள் விதிக்கப்படுவதால் அதில் பாதியான 44 வீதத்தை அமெரிக்கா விதிப்பதாக கூறினார்.
ட்ரம்பின் இந்த வரி விதிப்பானது இலங்கையின் பொருளாதாரத்தில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் சுனில் ஹெந்துன்நெத்தி கூறியுள்ளார். குறிப்பாக ஆடைத் தொழில்துறை இதனால் பாதிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். என்றாலும், இந்த விடயத்தில் அமெரிக்காவுடன் பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.