இலங்கை வரலாற்றில் மிகவும் பரபரப்பான தேர்தல்களில் ஒன்றாக 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காணப்பட்டது.
அதற்கு காரணம் எந்தவொரு ஜனாதிபதியும் மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருக்கவில்லை.
18ஆவது சட்டத்திருத்தத்தை மேற்கொண்டு மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் தேர்தலில் களங்கண்டிருந்தார்.
இவரை எவராலும் வீழ்த்த முடியாதென்றே அன்றைய அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். அதற்கு முக்கிய காரணம் யுத்த வெற்றி நாயகனாக மகிந்த ராஜபக்ச வளம் வந்தமைதான்.
ஆனால், அவரது கட்சியின் பொதுச் செயலாளரை கட்சியிலிருந்து வெளியேற்றி தமது கூட்டணியின் பொது வேட்பாளராக களமிறக்கி மகிந்தவின் ஆசைக்கு முடிவுகட்டியிருந்தார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.
இந்த வெற்றியை இலங்கை பெற்ற இரண்டாவது சுதந்திரம் எனவும் ரணில் வர்ணித்திருந்தார். இந்த நிலையில், குறித்த தேர்தலில் செலவான நிதி மற்றும் அதற்கான நிபந்தனை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான பகிரங்க குற்றச்சாட்டொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
அர்ஜுன மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், ரணில் விக்கிரமசிங்க மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளித்ததாக அவர் கூறியுள்ளார்.
பிணைமுறி மோசடி தொடர்பாக நடத்தப்படும் புதிய விசாரணை குறித்து மேலும் உண்மைகளை வெளியிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜகத் விதானவின் இந்தக் கருத்து சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இதுகுறித்த கருத்துகளும் அரசியல் மேடைகளில் பகிரப்பட்டு வருகின்றன.