உச்சமடையும் அமெரிக்க – சீன வர்த்தகப் போர்

0
10
Article Top Ad

உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப். ஆனால், இது சீனாவுக்குப் பொருந்தாது என்று கெடுபிடி காட்டியுள்ளார்.

பரஸ்பர வரி பட்டியலை அமெரிக்க டொனால்டு ட்ரம்ப் கடந்த 2-ம் திகதி வெளியிட்டார். இதில் சீன பொருட்களுக்கான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது. இதற்குப் பதிலடியாக அமெரிக்கா சீனாவின் கூடுதல் வரி விதிப்புக்கு அபராதமாக 50% வரியை விதித்தது.

இதனால் சீனப் பொருட்களின் மீதான வரி 104% ஆனது. இந்நிலையில் இவ்விரு நாடுகளுக்கிடையிலான வரி யுத்தம் தீவிரமடைய அமெரிக்க பொருட்களுக்கான வரி இன்று (ஏப்.10) முதல் 84% ஆக உயர்த்தப்படும் என சீன நிதியமைச்சகம் நேற்று அறிவித்தது.

இந்தச் சூழலில் தான் உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார் டொனால்டு ட்ரம்ப். ஆனால் இது சீனாவுக்குப் பொருந்தாது என்று அறிவித்துள்ளார்.

சீனாவுக்கு மட்டும்125% வரி
பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்திய 24 மணி நேரத்திலேயே ட்ரம்ப் வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்திவைத்துள்ளார்.

வணிகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு போன்ற தாக்கங்களாலும், உலகளாவிய பொருளாதார மந்த நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தாலும் ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பை 24 மணி நேரத்திலேயே திரும்பப் பெற்றதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆயினும், பரஸ்பர வரி விதிப்பில் பேஸ்லைன் வரியாக 10% வரி விதிப்பு மட்டும் எல்லா நாடுகளுக்குமே தொடரும் என்றும் ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால், சீனாவுக்கான பரஸ்பர வரியை மட்டும் ட்ரம்ப் 125 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ட்ரம்ப் விளக்கம்:
வரி நிறுத்தம் பற்றி ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில், “பரஸ்பர வரி விதிப்பை அடுத்து உலகளவில் பல்வேறு நாடுகளும் இது தொடர்பாக எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவே விருப்பம் தெரிவித்தன, சீனாவைப் போல வரிக்கு வரி விதிக்கவில்லை.

உலக நாடுகளின் விருப்பங்களை மதித்து நாங்கள் புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். ஆனால் சீனா எங்களை மதிக்கவில்லை. எங்களின் பரஸ்பர வரிக்கு மேலும் மேலும் வரி விதிக்கிறது. இதனால் நாங்கள் சீனாவுக்கான வரியை 104 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக அதிகரித்துள்ளோம்.

நாங்கள் ஏற்கெனவே எச்சரித்திருந்தோம். எங்கள் வரிக்கு வரி விதிக்க வேண்டாம் என்று. சீனா அதை கேட்கவில்லை. நாங்கள் இப்போது அதன் மீதான வரியை 125 சதவீதமாக அதிகரித்துள்ளோம். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் பேச்சுவார்த்தை நடத்துங்கள் பலன் பெறுங்கள்; எதிர்த்துப் பாருங்கள் எகிறும் வரியை அனுபவியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here