அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீன பொருட்கள் மீதான வரிகளை 145% ஆக உயர்த்த முடிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று வெள்ளிக்கிழமை பெய்ஜிங் அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை 125% ஆக உயர்த்தியுள்ளது.
உலகின் 2வது இடத்தில் உள்ள பொருளாதாரமும், அமெரிக்க இறக்குமதிகளை வழங்கும் இரண்டாவது பெரிய நாடான சீனாவின் மீது கூடுதல் வரி அதிகரிப்புக்காக வெள்ளை மாளிகை முன்னெடுத்து வருகிறது.
என்றாலும், ஏனைய நாடுகளுக்கு 3 மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
“சீனா மீது அமெரிக்கா அசாதாரணமாக அதிக வரிகளை விதிப்பது சர்வதேச மற்றும் பொருளாதார வர்த்தக விதிகள், அடிப்படை பொருளாதார சட்டங்களை கடுமையாக மீறுகிறது.மேலும் இது முற்றிலும் ஒருதலைப்பட்சமான முடிவு” என சீனாவின் நிதி அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பரஸ்பர வரி பட்டியலை டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2ம் திகதி வெளியிட்டார். இதில் சீன பொருட்களுக்கான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா சீனாவின் கூடுதல் வரி விதிப்புக்கு அபராதமாக 50% வரியை விதித்தது.
இதனால் சீனப் பொருட்களின் மீதான வரி 104% ஆனது. இவ்விரு நாடுகளுக்கிடையிலான வரி யுத்தம் தீவிரமடைந்த நிலையில், அமெரிக்க பொருட்களுக்கான வரி 84% ஆக உயர்த்தப்படும் என சீன நிதியமைச்சு அறிவித்தது.
இந்தச் சூழலில் உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் ட்ரம்ப். எனினும் இது சீனாவுக்குப் பொருந்தாது என்று நேற்று தெரிவித்தார். மேலும் சீனாவுக்கான பரஸ்பர வரியை மட்டும் ட்ரம்ப் 125 சதவீதமாக அதிகரித்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை சீன பொருட்கள் மீதான வரியை 145% ஆக அதிகரிப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. இந்தப் பின்புலத்திலேயே தற்போது அமெரிக்க பொருட்களுக்கு சீனா 125 வீத வரியை விதித்துள்ளது.