சீனாவிலிருந்தோ வேறெந்த நாடுகளிலிருந்தோ வரும் நீர்மூழ்கிகளை கண்டறியும் நவீன தொழில்நுட்பம் இந்திய கடற்படை வசம்உள்ளது. கடலின் மேற்பரப்பில் உள்ள நீர்மூழ்கிகளை மாத்திரமன்றி ஆழ்கடலில் பயணிக்கும் நீர்மூழ்கிகளையும் கண்டறியும் அபாரமான நவீன தொழில் நுட்ப ஆற்றலை இந்திய கடற்படை கொண்டுள்ளதாக இந்திய கடற்படையின் முன்னாள் கிழக்குப்பிராந்திய தளபதி கொமடோர் சேஷாத்திரி வாசன் தெரிவிக்கின்றார்.
கடந்த 11ம்திகதி குளோப் தமிழிற்கு வழங்கிய நீண்ட மெய்நிகர் நேர்காணலின் போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை சில நாட்களுக்கு முன்னதாக ,இலங்கையிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் தமிழகத்தின் தூத்துக்குடியிலுள்ள துறைமுகமொன்றில் இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்திய நீர்மூழ்கி தொடர்பாக சில தினங்களுக்கு முன்னர் நியூஸ்பெஸ்டில் வெளியாகியிருந்த செய்தி இதோ..
இந்து சமுத்திர பிராந்தியத்திற்கு சீனாவிடமிருந்து விடுக்கப்படுகின்ற அழுத்தங்கள் காரணமாக இந்த நீர்மூழ்கிக் கப்பல் தமிழகத்திற்கு அழைக்கப்பட்டதா என இந்திய ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்றன.
இந்திய கடற்படைக்கு சொந்தமான INS ‘சிந்துஷாஸ்ட்ரா’ என்ற இந்த அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் கடலிலிருந்து வானை நோக்கியும் மற்றுமொரு நீர்மூழ்கிக் கப்பலை இலக்காக கொண்டும் தாக்குதல் நடத்தும் வல்லமை உள்ளிட்ட மேலும் பல இராணுவ தொழில்நுட்பங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
சுமார் ஒரு வாரமாக இந்த நீர்மூழ்கிக் கப்பல் தென்னிந்திய கடற்பரப்பில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வௌியாகியுள்ளது.
இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்புகொண்டு வினவியபோது இந்தியாவில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் மற்றும் இந்திய கடற்படையின் நடவடிக்கைகள் குறித்து தம்மால் கருத்து வௌியிட முடியாது என அறிவிக்கப்பட்டது.
நீர்மூழ்கிக் கப்பல் அல்லது வேறு தேசிய வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பிலான தீர்மானங்கள் உரிய அதிகாரிகளின் நடவடிக்கை, தேவைகள் உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு இந்தியா மற்றும் அதன் அபிலாஷைகளை பாதுகாக்கும் நோக்கத்தை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படுவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்தது.
பிராந்தியத்தில் பிரித்தானிய கடற்படையுடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ள போர் பயிற்சிகளில் இணைவதற்காகவே இந்த நீர்மூழ்கிக் கப்பல் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சீனா இலங்கையில் கடற்சார் வல்லமையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்ற பின்புலத்தில் இந்த விடயம் நிகழ்ந்துள்ளதாகவும் அந்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் இந்திய கடற்படையின் வல்லமை, சீனாவின் பிரசன்னத்தால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அதனை எதிர்கொள்ளும் ஆற்றல் உட்பட பல்வேறு கேள்விகளுக்கு இந்திய கடற்கடையின் முன்னாள் கிழக்குப்பிராந்திய தளபதியும் சீனா பற்றிய கற்கைகளுக்கான சென்னை சிந்தனைக்கூடத்தின் தற்போதைய பணிப்பாளருமான ஓய்வுபெற்ற கொமடோர் சேஷாத்திரி வாசன் குளோப் தமிழிற்கு வழங்கிய விரிவான நேர்காணல் இதோ…