அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக தொடர்ச்சியாக பல வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இலங்கையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் 2025 மே 6ஆம் திகதி நடைபெறவுள்ளன.
17 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இதில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களில் 339 சபைகளுக்கு இந்த தேர்தல் நடத்தப்படுகின்றது.
தபால்மூல வாக்களிப்பு
உத்தியோகபூர்வ கடமைகளின் காரணமாக தேர்தல் நாளில் நேரில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தேர்தல் செயல்முறையின் ஒரு முக்கிய அங்கமாக தபால்மூல வாக்களிப்பு அமைகின்றது. அதன்படி,
- தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள்
- பொலிஸ் மற்றும் முப்படை உறுப்பினர்கள்
- அரச பாடசாலைகள், அரசுக்குச் சொந்தமான பெருநிறுவனங்கள் மற்றும் சட்டகட்டமைப்புகளின் பணியாளர்கள்போன்றோருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
இம்முறை தபால் மூலம் வாக்களிக்க மொத்தம் 648,495 விண்ணப்பதாரர்கள் தகுதிபெற்றுள்ளதோடு, இன்று (29.04.2025) இறுதி நாளாகும். ஆகவே, இதுவரை வாக்களிக்காதவர்களை இன்று வாக்களிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
தபால்மூல வாக்களிப்பிற்காக தேர்தல் திணைக்களம் நான்கு நாட்களை ஒதுக்கியிருந்தது:
- ஏப்ரல் 24, 2025
- ஏப்ரல் 25, 2025
- ஏப்ரல் 28, 2025
- ஏப்ரல் 29, 2025
இதற்கு மேல் மேலதிக நாட்கள் வழங்கப்பட மாட்டாதென தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, தமக்கான இறுதி சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
காலதாமதமும் பின்னணியும்
அரசியல் பதற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இதுவரை தேர்தல்கள் பிற்போடப்பட்டமை தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மக்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதை இவ்வாறு தடுக்கும் வகையில் செயற்படுவதானது, வாக்காளர்களின் உரிமைய மீறுவதாகும் என 2024 ஓகஸ்ட் மாதம் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
படம் – மாதவ தென்னகோன்
இவ்வாறான நிலையில், நடைபெறும் இந்த தேர்தல் பாரிய எதிர்பார்ப்புகளை, குறிப்பாக கிராம மட்டங்களில் அதிகளவு எதிர்ப்பார்ப்பை ஏற்படுதியுள்ளது. எனினும் முன்னைய தேர்தல்கள் போலல்லாமல், மக்கள் ஆர்வமின்றி செயற்படுகின்றனர் என்பது அரசியல் மற்றும் தேர்தல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
செய்தியாக்கம் – கே.கே.