விடுதலைப் புலிகள் அமைப்பின் வங்கிகளிலும், அவர்களின் உடமைகளாக இருந்து இராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணைக்காக இதுவரை வைத்திருந்த தங்கம், வெள்ளி, மாணிக்கங்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் , விசாரணையின் பின்னர் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
120 ஆபரணப் பொதிகள் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளதோடு, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், இந்தப் பொருட்கள் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் இலங்கை மாணிக்க மற்றும் ஆபரண அதிகார சபையால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்படும் என அரசாங்கம் கூறியுள்ளது.
இந்த தங்கப் பொருட்கள் ஆபரண அதிகார சபையால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், அவற்றின் மதிப்பு மற்றும் எடை அளவு பகிரங்கப்படுத்தப்பட்டு ஊடகங்களுக்கு அறிவிக்கப்படவுள்ளது.
இவற்றின் உரிமையாளர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர், அவற்றை மீள ஒப்படைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
எனினும், இத்தனை வருட காலமாக இதனை ஒப்படைக்காமல் தற்போது முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையானது, அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த செய்யும் கைங்கரியம் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
எனினும், கடந்த ஆட்சியாளர்களின் மீதான குற்றச்சாட்டுக்களை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கையாகவும் இது அமைகின்றது என மற்றுமொரு தரப்பினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.