2025ஆம் ஆண்டு இறுதிக்குள் 500 தமிழ் பொலிஸாரை சேவையில் இணைத்துக்கொள்ளும் ஆலோசனைகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொலிஸ் துறையில் 10ஆயிரத்துக்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுகின்றன. இதுகுறித்து பொலிஸ் திணைக்களத்துடன், நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பிரகாரம் 10ஆயிரம் பொலிஸாரை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக இவ்வாண்டு 2ஆயிரம் பொலிஸார் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர். இதில் 500 தமிழ் பொலிஸாரை இணைத்துக்கொள்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளோம் என்றும் ஜனாதிபதி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கூறியுள்ளார்.
இதேவேளை, மின்சாரக் கட்டணத்தில் ஓரளவு விலை அதிகரிப்பு ஏற்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த விலை உயர்வு வரும் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும், கடந்த டிசம்பர் மாத மின் கட்டணத்தை விட இது அதிகமாக இருக்காது. ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் மின் விலை திருத்தத்தின்படி இந்த விலை திருத்தம் செய்யப்படும்.
மின்சார சபையின் 220 பில்லியன் கடன் மீள் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் ஒரு பகுதி மின்சார கட்டணத்தில் சேர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணங்களில் அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு ஐ.எம்.எப். அரசாங்கத்துக்கு வழங்கியுள்ள ஆலோசனை தொடர்பிலேயே ஜனாதிபதி இந்த பதிலை வழங்கியுள்ளார்.