இலங்கையில் அதிகரிக்கும் துப்பாக்கி வன்முறை

0
137
Article Top Ad

இலங்கையில் அண்மைய காலமாக ஆங்காங்கே துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமையானது, பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்களையும் பீதியையும் ஏற்படுத்தி வருகின்றது. நாளை (6ஆம் திகதி) உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று மாலை வேட்பாளர் ஒருவர் மீது களுத்துறையில் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை கல்கிஸ்ஸ பகுதியில் 19 வயதான இளைஞன் ஒருவர் பொதுமக்கள் உலாவும் பகுதியில் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும் போதே விரட்டி விரட்டி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் அதிகரித்து வரும் பொது பாதுகாப்பின்மை ஆகியவற்றின் வளர்ந்து வரும் போக்கின் ஒரு பகுதியாகவே இது அமைகின்றது. ஆனால், இது தனிப்பட்ட முரண்பாடுகள் என்றும், இதற்கும் பாதுகாப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் அரச தரப்பு ஏற்கனவே கூறியதை, தொடர்ந்தும் கூறப்போகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

களுத்துறை துப்பாக்கிச் சூடு

 

நாளை நடைபெறும் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மீது நேற்று மாலை, களுத்துறை, நாகொடாவில் உள்ள போம்புவாலா பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னணி மற்றும் நோக்கம், இதுவரை கண்டறியப்படவில்லை. உள்ளூராட்சித் தேர்தல் நெருங்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு இடம்பெற்றுள்ளமையானது, இன்றைய நிலையற்ற சூழ்நிலையில் அரசியல் வன்முறை மற்றும் பொது நபர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த கரிசனைகளை எழுப்புகிறது.

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு

மக்கள் நடமாட்டம் மிக்க கல்கிஸ்ஸ கடற்கரை வீதியில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 19 வயதான இளைஞனை துரத்தித் துரத்தி சுட்டுக்கொன்றுள்ளனர். படுகாயங்களுக்கு உள்ளான இளைஞன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பொது இடத்தில் நடத்தப்படும் இவ்வாறான துணிச்சலான தாக்குதலானது, குற்றவாளிகள் எவ்வாறு அச்சமற்றவர்களாக மாறி வருகின்றனர் என்பதையும், துப்பாக்கி வன்முறை எவ்வாறு மிகவும் சாதாரணமாகி வருகின்றது என்பதையும் காட்டுகின்றது.

பொலிஸாரின் பதில்

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இளைஞனின் தாய் போதைப்பொருளுடன் தொடர்புடையவர் என்றும், அவருக்கு எதிராக நீதிமன்ற வழக்குகள் உள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க, இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். எனினும், இந்த தாக்குதல் சம்பவம், தாயாருடன் தொடர்புடைய சம்பவத்தின் காரணமாக இடம்பெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

எனினும், இவ்வாறான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் பின்னர், உயிரிழந்தவர்கள் சார்ந்த குற்றச்சாட்டுக்களை பொலிஸார் முன்வைக்கின்றனர் என சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் பொதுமக்களின் அச்சம்

இந்த துப்பாக்கிச் சூடுகள் ஒரு பாரிய பிரச்சனையின் அறிகுறியாகவே தென்படுகின்றது. இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மிகவும் மோசமாகி வருகின்றது. கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கி வன்முறை, பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்களுடன் பெரும்பாலும் தொடர்புடையதாக உள்ளதோடு, இவை பட்டப்பகலில் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சர்வ சாதாரணமாக நிகழ்கின்றது. இருப்பிடங்களுக்கு வந்து சாதாரணமாக சுட்டுவிட்டு தப்பிச்செல்கின்றனர். இதுவே மக்களின் அச்சத்திற்கான காரணமாக உள்ளது.

சட்ட அமுலாக்கத்தில் காணப்படும் பலவீனம்

துப்பாக்கி வைத்திருப்பதற்கு எதிரான சட்டங்கள் இருந்தபோதிலும், அவை வினைத்திறனுடன் செயற்படுத்தப்படுவதில்லை. இதனால் குற்றவாளிகள் தண்டனையின்றி செயற்பட வழிவகுக்கின்றது.

மறுபக்கத்தில், சட்டத்தின் மீதும் சட்ட அமுலாக்க செயன்முறையின் மீதும் நம்பிக்கை இழந்துவரும் மக்கள், சட்டத்தை கையில் எடுக்கும் நிலைக்குள்ளும் சென்றுள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகம் அதிகரித்து வருகின்றபோதும், அவர்கள் கைதாகி வெளியில் வரும் நிலை அல்லது சிறைக்குள் இருந்துகொண்டே தமது சகாக்களை பயன்படுத்தி போதைப்பொருள் வர்த்தகங்களை முன்னெடுக்கும் நிலை காணப்படுகின்றது. அவ்வப்போது கைப்பற்றப்படும் பெருந்தொகையான போதைப்பொருள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

சட்ட அமலாக்கத்தின் குறைபாடுகள், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க அனுமதிக்கும் அதேவேளை, இது பிரச்சினையை மேலும் மோசமாக்குகின்றது.

அரசியல் மற்றும் சமூக தாக்கங்கள்

நாடு ஏற்கனவே அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கின்றது. மக்களின் வாழ்க்கைச் செலவு சகல மட்டங்களிலும் உயர்ந்து, பொருளாதார ரீதியாக நலிவுற்றுள்ளனர். இவ்வாறான சூழலில் அதிகரித்துவரும் வன்முறைகள், நிச்சயமற்ற தன்மையை மக்களுக்கு உணர வைக்கின்றது. தேர்தலுக்கு முன்னர் அரசியல் வேட்பாளர்கள் மீதான தாக்குதல்கள் உறுதியற்ற தன்மையை மேலும் அதிகரிப்பதாக உள்ளதோடு, ஜனநாயகத்தை ஆபத்தில் தள்ளியுள்ளது. இந்நிலை அதிகரிக்கலாம் என்ற அச்சத்தையும் மக்கள் வெளிப்படுத்துகின்றனர்.

இவ்வாறான பின்னணியில், சட்ட அமுலாக்கத்தை மேம்படுத்துதல், பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல் போன்ற வலுவான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், நிச்சயமாக நாடு உறுதியற்ற நிலைக்குச் செல்லும். இது ஏனைய நெருக்கடிகளுக்கு வித்திடும். அந்தவகையில், சீர்திருத்தங்களை மேற்கொள்ளல் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தல் போன்றவற்றை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய அவசர தேவை காணப்படுவதால், அடுத்த சில வாரங்கள் அரசாங்கத்திற்கு மிக முக்கியமானதாக அமையக்கூடும்.

செய்தியாக்கம் – கே.கே.