ஐக்கிய நாடுகள் வெசாக் நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதிவரை வியட்நாமுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்தப்பயணத்தில் வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங், உட்பட அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளையும் ஜனாதிபதி சந்தித்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்தப் பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையில் சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி தொடர்பாக உடன்பாடும் எட்டப்பட்டது.
அத்துடன், வியட்நாமின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்கும் இலங்கையின் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சுக்கும் இடையிலான இயந்திர உற்பத்தி ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது. அத்துடன், வியட்நாம் விவசாய விஞ்ஞான அகாடமிக்கும் இலங்கை விவசாயத் திணைக்களத்திற்கும் இடையிலான விவசாய ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கும் வியட்நாமின் இராஜதந்திர அகாடமிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், மற்றும் வியட்நாம் வர்த்தக ஊக்குவிப்பு முகவர் நிறுவனத்திற்கும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்களும் (MoU) கைச்சாத்திடப்பட்டன.
ஐ.நா. வெசாக் நிகழ்வில் உரையாற்றிய பின்னர் ஜனாதிபதி அவசரமாக நாடு திரும்பியிருந்தார். உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்கும் நோக்கில் அவர் அவசரமாக நாடு திரும்பியிருந்தார். வியட்நாமில் இருந்து தனியார் ஜெட் விமானம் ஒன்றின் ஊடாகவே ஜனாதிபதி நாடு திரும்பியிருந்தார்.
இதற்காக எவ்வளவு செலவு செய்து தனியார் ஜெட் விமானத்தில் ஜனாதிபதி நாடு திரும்ப வேண்டும் என பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. என்றாலும், வியட்நாம் அரசாங்கத்தின் ஜெட் ஒன்றின் ஊடுாகவே ஜனாதிபதி திரும்பியுள்ளதாகவும் அதற்கான முழுமையான செலவை அந்நாடே செய்துள்ளதாகவும் அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் பயணத்தை விமர்சனத்துக்கு உள்ளாக்கும் நோக்கில் போலியான சில செய்திகளை பரப்பும் முயற்சிகளில் பல தரப்புகள் ஈடுபட்டுள்ளதால்தான் இவ்வாறான செய்திகள் பரப்பப்படுவதாகவும் அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.