கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டமை தொடர்பாக, தன் மீது சமூக ஊடகத்தில் சேறு பூசப்படுவதாக தெரிவித்து தனியார் கல்வி நிலைய உரிமையாளர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறையிட்டுள்ளார்.
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த ஏப்ரல் 29 அன்று 16 வயதான மாணவி ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இது தொடர்பாக பாடசாலை ஆசிரியர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர் இந்த மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அப்பாடசாலையிலிருந்து விலகி தனியார் மேலதிக வகுப்பிற்குச் சென்றபோது அங்கு தன்னை அவமானப்படுத்தியதாகவும், அதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகியதாலேயே அந்த மாணவி உயிரிழந்தார் எனவும் பெற்றோர் கூறுகின்றனர்.
ஆனால், குறித்த மாணவி தமது கல்வி நிறுவனத்திற்கு வந்திருந்த போது உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதனை குணப்படுத்திவிட்டு மீண்டும் அழைத்துவருமாறு பெற்றோருக்கு கூறியதாகவும் குறித்த தனியார் கல்வி நிலைய உரிமையாளர்தெரிவித்தார். இந்தச் சம்பவம் மூன்று மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகவும், தற்போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தன்மீது சேறுபூசும் நடவடிக்கையாக சமூக ஊடகத்தில் பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் தெரிவித்து முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பந்தப்பட்ட ஆசிரியர் புத்தளம் பாடசாலையொன்றிற்கு இடமாற்றம் செய்யப்பட்டபோதும், அவ்வாறான ஆசிரியர் ஒருவர் தமக்கு வேண்டாம் என தெரிவித்து இன்று புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து, அந்த ஆசிரியரை கட்டாய விடுமுறையில் அனுப்புவதாக கல்வியமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. பூரண விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இவ்விடயத்தில் யாரேனும் தமது கடமையை புறக்கணித்துள்ளனரா என்பதை ஆராய உள்ளக விசாரணை இடம்பெற்று வருவதாகவும் கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.