ட்ரம்பின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயமும் சிரியா மீதான தடை நீக்கமும்

0
7
Article Top Ad

சிரியா மீதான அமெரிக்கக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் மீதான அனைத்து அமெரிக்கத் தடைகளையும் முடிவுக்கு கொண்டு வருவதாக அவர் அறிவித்துள்ளார். டிரம்ப் தனது மத்திய கிழக்கு நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சவுதி அரேபியாவின் ரியாத்திற்கு மேற்கொண்ட உயர்மட்ட விஜயத்தின் போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலக நிதிக்கட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டு காணப்பட்ட சிரியாவிற்கு, இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைவதோடு, பொருளாதார ரீதியில் அந்த நாடு முன்னேற்றப்பாதையை நோக்கி பயணிக்க வழிவகுக்கும். இது அந்நாட்டு மக்கள் மத்தியில் உற்சாகத்தையும் சந்தோசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  இந்த அறிவிப்பு வெளியாகிய மறுநாளான இன்று, இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே சவுதியில் மூடிய அறையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

சிரியாவிற்கு ஒரு புதிய அத்தியாயம்

ரியாத்தில் நடந்த முதலீட்டு மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப், 2011 முதல் அமுலில் உள்ள தடைகள் ‘அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றியுள்ளன’ என்றும், சிரியா முன்னேறிச் செல்ல மற்றும் சிறந்த வாய்ப்பைப் பெறவேண்டிய நேரம் இது என்றும் கூறினார். பல வருட பேரழிவுமிக்க மோதலுக்குப் பிறகு சிரியாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை அவர் வலியுறுத்தினார். ‘இது அவர்கள் பிரகாசிக்க வேண்டிய தருணம். ஆகவே நாங்கள் தடைகளை நீக்குகிறோம்’ என்று ட்ரம்ப் கூறினார்.

அசாத் ஆட்சியின் வன்முறையான எதிர்ப்பு ஒடுக்குமுறை மற்றும் பரவலான மனித உரிமை மீறல்களுக்கு பதிலளிக்கும் விதமாக முதலில் விதிக்கப்பட்ட தடைகள், சிரியாவை உலக நிதி கட்டமைப்பிலிருந்து நீண்ட காலமாக தனிமைப்படுத்தியிருந்தது. ஒரு தசாப்தத்திற்கும் மேலான போரிலிருந்து நாடு மீள முயற்சிக்கும்போது, அவற்றை நீக்குவது மனிதாபிமான அமைப்புகள், வெளிநாட்டு முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கான வழியை திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்பின் தடைநீக்க அறிவிப்பினை தொடர்ந்து, சிரியா முழுவதும் மக்கள் நேற்றிரவு தெருக்களில் ஆரவாரம் செய்து பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இராஜதந்திர பின்னணியும் பிராந்திய செல்வாக்கும்

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்டோகன் ஆகியோர், இந்த தடைகளை நீக்குவது தொடர்பாக தொடர்ச்சியாக பரப்புரை செய்து வந்த நிலையில், அவர்களுடனான சந்திப்பினை தொடர்ந்தே ட்ரம்பின் தீர்மானம் அறிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை, சிரியாவின் மீள்கட்டமைப்புக்கு நிதியளிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதற்கு உறுதியளித்துள்ள வளைகுடா அரபு நாடுகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சைகையாகக் கருதப்படுகிறது. உலக வங்கிக்கு சிரியா வழங்கவேண்டிய 15 மில்லியன் டொலர் கடனை அடைக்கும் திட்டங்களை அண்மையில் சவூதி அரேபியாவும் கட்டாரும் அறிவித்தன. மேலும் பல சிரிய நிறுவனங்கள் மீதான தடைகளை இங்கிலாந்தும் ரத்து செய்துள்ளது.
சிரியா புதிய தலைமைக்கு மாறும்போது இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பஷார் அல்-அசாத் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், முன்னாள் கிளர்ச்சித் தலைவரான அஹ்மத் அல்-ஷரா கடந்த ஜனவரி மாதம் இடைக்கால ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார்.

25 வருடங்களின் பின்னரான சந்திப்பு

அமெரிக்கா ஜனாதிபதிக்கும் சிரிய இடைக்கால ஜனாதிபதிக்கும் இடையில் இன்று (14) சவுதி அரேபியாவில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கடந்த 25 வருட காலத்தில் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பாக இது அமைகின்றது. சுமார் 33 நிமிடங்கள் இச்சந்திப்பு இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சந்திப்பில் சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் உடனிருந்ததோடு, துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் ஒன்லைன் வீடியோ உரையாடல் மூலமாக கலந்துகொண்டார்.

இந்த சந்திப்பின் பின்னர் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய ட்ரம்ப், சிரியாவிற்கு ஒரு வாய்ப்பினை வழங்குவது குறித்து மிகவும் வலுவாக உணர்ந்ததாகவும், தடைகள் என்பது ஒரு நாட்டை உண்மையில் முடமாக்குகின்றன என்றும் தெரிவித்தார்.

பிராந்திய பாதுகாப்பும் தொடர்ச்சியான பதட்டங்களும்

ராஜதந்திர முன்னேற்றம் இருந்தபோதிலும், சிரியா இன்னும் பிராந்தியத்தில் பதட்டமான பகுதியாகவே உள்ளது. சிரியாவில் உள்ள இடங்களை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, மேலும் நாட்டிற்குள் சிறுபான்மை குழுக்களின் பாதுகாப்பு தொடர்பாக பதட்டங்கள் அதிகரித்துள்ளன.

அல்-கொய்தாவுடனான தொடர்பினை அல்-ஷரா 2016ஆம் ஆண்டில் பகிரங்கமாக முறித்துக் கொண்ட போதிலும், இஸ்ரேலிய அரசாங்கம் புதிய சிரிய நிர்வாகத்தின் மீது சந்தேகத்தையே வெளிப்படுத்தியுள்ளது. ‘டமாஸ்கஸை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றிய இட்லிப்பிலிருந்து வந்த பயங்கரவாதக் குழு’ என்று அதனை முத்திரை குத்தி வருகின்றமை, அல்-ஷரா அரசாங்கத்திற்கு பாரிய சவாலாகும்.

பொருளாதார மற்றும் மூலோபாய ஒப்பந்தங்கள்

ட்ரம்பின் சவுதி அரேபிய வருகையை குறிக்கும் வகையில் 142 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஆயுத ஒப்பந்தத்திலும், அமெரிக்காவில் சவுதி ஆரேபியா முதலீடு செய்வதற்கான 600 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டமையானது, வொஷிங்டனுக்கும் ரியாத்துக்கும் இடையிலான ஆழமான பொருளாதார உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சிரியா குறித்த அறிவிப்பு மற்றும் இந்த ஒப்பந்தங்கள், மத்திய கிழக்குடனான உறவு மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களின் மீதான மாற்றத்தை குறிப்பதாக அமைகின்றது.

ஒட்டுமொத்தமாக, ட்ரம்பின் இந்த தீர்மானத்தை, நாட்டின் எதிர்காலத்திற்கான முக்கிய திருப்புமுனை என சிரிய அதிகாரிகள் வரவேற்றுள்ளதோடு, ஸ்திரத்தன்மை, தன்னிறைவு மற்றும் உண்மையான மீள்கட்டமைப்புக்கான நம்பிக்கையை வெளிப்படுத்தினர். இருப்பினும், பொருளாதாரத் தடைகளை நீக்குவது என்பது ஒரு சிக்கலான மீட்பு செயற்பாட்டில் ஒரு படிமுறை மட்டுமே என்றும், சிரியாவுக்கு பல்வேறு அரசியல் மற்றும் பாதுகாப்பு சவால்கள் எஞ்சியுள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

செய்தியாக்கம் – கே.கே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here