நாட்டு மக்களுக்கு அவசியமான உப்பைக்கூட சரியாக வழங்க முடியாத அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மக்கள் இப்போது சிரமங்களோடு வாழ்ந்து வருகின்றனர் என்றும் வருமான மூலங்கள் குறைந்து, வாழ்க்கைத் தரம் குறைந்து அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், அரசாங்கம் அதற்கு நடவடிக்கை எடுக்காமல் செயற்திறன் இன்றி காணப்படுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டு அறியும் “கிராமத்துக்கு கிராமம், நகரத்துக்கு நகரம்” என்ற வேலைத்திட்டத்தின் கீழ், கொழும்பு மல்லிகாராம வீடமைப்புத் தொகுதியின் மக்களுடன் நேற்று (16) நடந்த மக்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்களின் பிரச்சினைகளுக்கு பதில்களோ தீர்வுகளோ வழங்க முடியவில்லை. ஆனால், உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க எதிர்க்கட்சிக்கு உரிமை இல்லை என்ற மிரட்டலையும் விடுவிக்கின்றனர் என சஜித் கூறியுள்ளார்.
எனினும், எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மையுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிலைநாட்டி, ஜனநாயக உரிமைகளை முழுமையாக பயன்படுத்த அதிகபட்ச நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி எடுக்கும் என சஜித் கூறியுள்ளார்.
அத்தோடு, அரசாங்கம் செய்ய முடியாததை ஐக்கிய மக்கள் சக்தி செய்து காட்டுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.