துஷித ஹல்லோலுவ மீதான துப்பாக்கிச்சூடு, இலங்கை அரசியல் பரப்பில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவர் அண்மையில் ஜனாதிபதி அநுர மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததோடு, அதன் விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன. இதன் பின்னணியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூடு, பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
யார் இந்த துஷித ஹல்லோலுவ?
2017 முதல் 2019 வரை தேசிய லொத்தர் சபையின் நிர்வாக பணிப்பாளராக பணியாற்றிய துஷித, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகமாக செயற்பட்டுள்ளார். அதுமாத்திரமன்றி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் காலஞ்சென்ற முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரின் கீழ் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுடனான அவரது நெருங்கிய தொடர்பே பிரதானமாக பேசப்பட்டது.
தேசிய லொத்தர் சபை விவகாரம்
தேசிய லொத்தர் சபையின் நிர்வாக பணிப்பாளராக செயற்பட்ட காலகட்டத்தில், அவருக்கு அலுவலகத்தின் கணினி மற்றும் கையடக்க தொலைபேசி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. அவர் வெளியேறியதும், இந்தப் பொருட்களை வைத்திருப்பது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டதோடு, அரச சொத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி வழக்குத் தொடரப்பட்டது. எனினும், ஹல்லோலுவவின் சட்டக் குழுவானது, குறித்த பொருட்களுக்கு அவர் பணம் செலுத்த முயன்றதாக வாதிட்டது. எனினும் முறைப்பாடு அளிக்கப்பட்ட பின்னரே பணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதோடு, வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய குற்றச்சாட்டுகளும் சிஐடி விசாரணையும்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கிரேக்கத்தில் பாரிய நிதி முதலீடு செய்ததாக அண்மையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த துஷித, சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டார். இந்தக் கூற்று அவதூறானது மற்றும் பொய்யானது என்று ஜனாதிபதி அலுவலகம் உடனடியாக கண்டனம் வெளியிட்டதோடு, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் சட்டத்தரணி அகலங்க உக்வத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்தார். ஜனாதிபதியின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முறையிடப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக இம்மாதம் 15ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகிய துஷித வாக்குமூலம் வழங்கினார். இது ஊடகங்களினதும் மக்களினதும் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இது தொடர்பான விசாரணை தற்போது தற்போது நடைபெற்று வருவதோடு, இணைய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
இவ்வாறான பின்னணியில், நேற்று (17.05.2025) கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் துஷித ஹல்லோலுவவும் அவரது சட்ட ஆலோசகர் தினேஷ் தொடங்கொடவும் குறிவைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் மற்றும் பல செய்தி அறிக்கைகளின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் அவர்களின் வாகனத்தை வழிமறித்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, துஷித ஹல்லோலுவவைத் தாக்கியும் உள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு வாகனத்திலிருந்து ஒரு இரகசிய கோப்பு மற்றும் பிற ஆவணங்களையும் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிஐடி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டமையானது அரசியல் ரீதியில் பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்துள்ளது. இலங்கை அரசியல் அரங்கில் செல்வாக்கு மிக்க தலைவர்களுடனான துஷிதவின் நீண்டகால உறவுகள், தற்போதைய ஜனாதிபதிக்கு எதிரான அவரது சமீபத்திய வெளிப்படையான குற்றச்சாட்டுகளுடன் இணைந்து, அவரை வெளிப்படையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளன. மற்றும் திருடப்பட்ட கோப்புகள், அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கலாம் என்ற ஊகங்களும் எழுந்துள்ளன. மறுபுறத்தில் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சில கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
செய்தியாக்கம் – கே.கே.