1948ஆம் ஆண்டின் குடியுரிமை-வாக்குரிமை பறிப்பு சட்டங்கள், சிங்களம் மட்டும் சட்டம், பண்டா-செல்வா மற்றும் டட்லி-செல்வா ஒப்பந்தங்கள் மற்றும் சந்திரிக்காவின் 2000ம் வருட தீர்வு திட்டம் ஆகியவை அகெளரவமான முறைகளில் உதாசீன படுத்த பட்டமை, 13ம் திருத்தம் முழுமையாக அமுல் செய்ய படாமை, பல இனங்கள், மதங்கள், மொழிகள் கொண்ட இலங்கையின் பன்முக தன்மை அங்கீகரிக்க படாமை, கற்றுகொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் (LLRC) சிபாரிசுகள் அமுல் செய்ய படாமை, யுத்தத்தின் பின் மகிந்த-பான்கி-மூன் வெளியிட்ட கூட்டறிக்கை அலட்சியபடுத்தபட்டமை, ஆகிய தவறுகளை திருத்தி முன் நகர முடியாவிட்டால் எமது நாட்டின் தேசிய பயணம் நின்ற அதே இடத்திலேயே நிற்கும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவுசெய்துள்ளார்.
அத்தோடு, இலங்கையின் அனைத்து மக்களும் இறந்த தம் அனைத்து உறவுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இலங்கையர்களாக நினைவு கூரும் ஒரு எதிர்காலத்தை நோக்கி பயணிக்க வேண்டும். தெற்கில், வடக்கில் நிகழ்ந்த அரச மற்றும் அரசற்ற பயங்கரவாத நிகழ்வுகளுக்கு எதிரான வெற்றி கொண்டாட்டங்களையும் கூட கொண்டாடலாம். ஆனால், இந்த இலக்கை அடைய இலங்கை நாடு, முப்பது வருட காலம் யுத்தம் நிகழ்ந்தமைகான மூல காரணங்களை தேடி அறிந்து அவற்றுக்கு தீர்வு தேட வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க, அநுர குமார திசாநாயக்க, சஜித் பிரேமதாச யாராக இருந்தாலும், தீர்வுகளை தேடாவிட்டால், நாம் நின்ற அதே இடத்திலேயே நிற்போம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இலங்கை சமூகத்தில் மரணித்து போன உறவுகள், இன்று முள்ளிவாய்க்காலிலும், தெற்கிலும் நினைவு கூரப்படுகிறார்கள். தெற்கில் இராணுவ வெற்றி விழா நடத்தப்படுகிறது. நினைவு கூரலும், வெற்றி விழாவும் ஒருசேர நடத்தலாம். அந்த நாள் வர வேண்டும். ஆனால் அந்த இலக்கை, முப்பது வருட காலம் யுத்தம் நிகழ்ந்தமைகான மூல காரணங்களை தேடி அறிந்து அவற்றுக்கு தீர்வு தேடாமல் அடைய முடியாது என்றும் மனோ கூறியுள்ளார்.