Article Top Ad
அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் குழப்ப மீண்டும் இனவாதப் பிரிவுகளைத் தூண்டிவிட உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சில தீய சக்திகள் முயற்சிக்கின்றன எனவும் அதற்கு கனடா இடமளிக்கக் கூடாது எனவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மக்கள் மீண்டும் இன ரீதியாகப் பிளவுபடுவதற்கு இடமளிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது இவற்றை வலியுறுத்தியதாக, அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
30 வருடகால யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கு மக்கள் இன்னும் முறையான கவனம் செலுத்தப்படாமல் வாழ்கின்றனர். கடந்தகால அரசாங்கங்கள் தமிழ் மக்களைப் பெரும்பாலும் புறக்கணித்தன. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தப் பாகுபாடுமின்றி அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாரிய அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்த உறுதி பூண்டுள்ளதாகக் அமைச்சர் இச்சந்திப்பின்போது கூறியுள்ளார்.
மேலும் நாட்டில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்ப அரசாங்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்றும், எந்த வடிவத்திலும் இனவாதத்திற்கு இனி இடமளிக்கப்பட மாட்டாது என்றும் கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு கனடாவின் முழு ஆதரவை வழங்குவதாக இதன்போது கனேடிய உயர்ஸ்தானிகர் கூறியதாகவும் அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
