அரசியலுக்கு வருவது தொடர்பில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பரிசீலித்துவருகின்றார் என தெரியவருகின்றது. இந்த தகவலை அவரின் மனைவி உறுதிப்படுத்தியுள்ளார்.
” அரசியல் ரீதியில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் அவர் சிந்தித்து வருகின்றார்.” – என்று ஜூலியன் அசாஞ்சேயின் மனைவி ஸ்டெல்லா கூறியுள்ளார்.
பிரிட்டன் சிறையிலிருந்து 2024 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஜூலியன் அசாஞ்சே விடுதலை செய்யப்பட்டார். அதன்பின்னர் அவர் தாய்நாடான ஆஸ்திரேலியா திரும்பினார்.
இராணுவ இரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், ஜூலியன் அசாஞ்ச் விடுதலை செய்யப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க நீதித்துறையுடன் அவர் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த செய்தியாளர் ஜூலியன் அசாஞ்ச் கடந்த 2006 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்தை நிறுவினார்.
2010 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான், ஈராக் போர் தொடர்பான இரகசிய ஆவணங்கள் மேற்படி இணையதளத்தில் வெளியாகியிருந்தன. இதில் அமெரிக்க இராணுவ ரகசியங்கள் பல பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த சூழலில் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜூலியன் அசாஞ்சையை கைது செய்ய கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பரில் சுவீடன் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
இந்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கடந்த 2012 ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் அவர் தஞ்சமடைந்தார்.
எனினும், 2019 ஆம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தை ஈக்வடார் அரசு வாபஸ் பெற்றது.
இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் பொலிஸார் ஜூலியன் அசாஞ்சை கைது செய்தனர். 5 ஆண்டுகளாக தெற்கு லண்டனில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.
அமெரிக்காவை உளவு பார்த்தது, இராணுவ இரகசியங்களை திருடியது உட்பட 17 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.
அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அவரை நாடு கடத்த பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் கடந்த 2022 ஆம் ஆண்டு இணங்கியது. இதற்கு எதிராக ஜூலியன் அசாஞ்ச் சட்டப்போராட்டத்தில் இறங்கினார்.
ஜூலியன் அசாஞ்ச் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அமெரிக்கா உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அவர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஜூலியன் அசாஞ்சே பிரிட்டன் சிறையிலிருந்து 2024 இல் விடுதலையானார். அமெரிக்காவுடனும் இணக்கப்பாடு எட்டப்பட்டது. இதுவிடயத்தில் ஆஸ்திரேலியா அரசாங்கமும் தலையிட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அரசியல் நகர்வு பற்றி அவர் பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவை மையப்படுத்தியதாகவே அவரது அரசியல் நகர்வு அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.