தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கருத்தியல் ரீதியில் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை. அதனால்தான் கனடாவில்கூட இனவழிப்பு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
அத்துடன், தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்பன வேறு, புலிகளின் அபிலாஷைகள் என்பன வேறு. இதை புரிந்துகொள்ள முடியாததால்தான் வடக்கில் பெரும் பின்னடைவை அரசாங்கம் சந்தித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே நாமல் ராஜபக்ச இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
” புலிகளுடன்தான் நாம் போர் செய்தோம். பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்த போர் எப்படி இனவாதமாகும்? எமது புலனாய்வுப் பிரிவில் முஸ்லிம் அதிகாரிகள் உள்ளனர். விமானப்படையில் தமிழ் அதிகாரிகள் இருக்கின்றனர். போரை முடித்த பிறகு பொலிஸ் மற்றும் இராணுவத்துக்கு தமிழ் இளைஞர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
நாம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடன் போரிடவில்லை. புலிகளுடன்தான் சமரிட்டோம். ஆனால் தற்போதைய அரசாங்கம் ஒட்டுமொத்த தமிழர்களும், புலிகளுக்கு சமனானவர்களாக பார்ப்பதற்கு முற்படுகின்றது. இது தவறு. இந்த விடயத்தில்தான் இனவாதம் உள்ளது.” எனவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் வடக்கில் இருந்து கிடைக்கப்பெற்ற பெறுபேறு தொடர்பில் ஜனாதிபதி ஆழமாக ஆராய வேண்டும்.
வீதிகளை திறந்தார்கள், காணிகளை கையளித்தார்கள், ராஜபக்சக்களால் களவாடப்பட்டது எனக் கூறப்படும் தங்கத்தைகூட கடைசி நேரத்தில் ஒப்படைத்தார்கள். இவ்வாறு வழங்க வேண்டிய அனைத்தையும் வழங்கினார்கள். இறுதியில் தேர்தல் முடிவு எவ்வாறு அமைந்தது? ஆக தமது பயணம் தவறு என்பதை ஜனாதிபதி உணர வேண்டும். ” எனவும் நாமல் ராஜபக்ச கூறினார் .
கருத்தியல் ரீதியில் பயங்கரவாதிகள் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை. அதனால்தான் கனடாவில் இனவழிப்பு நினைவகம்கூட அமைக்கப்பட்டுள்ளது. கனடாவில் புலி டயஸ்போராக்கள் உள்ளனர். அதேபோல தமிழ் டயஸ்போராக்கள் அனைவரும் புலிகள் அல்லர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.” – என நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.