மனித குலத்துக்கு அபாய சங்கு ஊதும் பருவநிலை மாற்றம் -ஐபிசிசி அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்

0
202
Article Top Ad

உலக அளவிலான சராசரியை விட ஆசியாவைச் சுற்றியுள்ள கடல் மட்டத்தின் உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று ஐபிசிசி எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான நாடுகளுக்கு இடையேயான குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்பு நூறு ஆண்டு காலத்தில் கடலில் காணப்பட்ட இந்த நீட்மட்ட உயர்வு, 2050க்குள் ஆறு முதல் ஒன்பது ஆண்டுகளில் ஏற்படலாம் என்று இந்த அறிக்கை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்த இந்திய வெப்ப மண்டல வானிலை விஞ்ஞானி ஸ்வப்னா பனிக்கல் கூறியுள்ளார்.

இந்த கடல் மட்ட உயர்வு, இந்திய பெருங்கடலில் அதிகமாக இருப்பதாக ஆய்வு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 2006 முதல் 2018ஆம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு 3.7 மில்லி மீட்டர் அளவுக்கு இந்திய பெருங்கடல் மட்டம் உயர்ந்தது.

ஐபிசிசியின் இந்த ஆய்வறிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை 195 உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டன. இந்த நாடுகள்தான் பருவநிலை மாற்றத்தின் இயல்பு மற்றும் புவி வெப்பமயமாதலுக்கு மனிதர்கள் எவ்வாறு காரணமாகிறார்கள் என்பதை ஆராய்ந்து வருகின்றன.

வரும் நவம்பர் மாதம் கிளாஸ்கோவில் பருவநிலை மாற்றம் தொடர்பான COP26 என்ற உலக தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்துக்கு முன்பாக இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

அந்த கூட்டத்தில் பங்கேற்கும் நாடுகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக நவீன கால பருவநிலை மாற்ற அறிவியல் அணுகுமுறை ஆலோசனைகளை தமது அறிக்கையில் இந்த குழு உலக நாடுகளுக்கு வழங்கியிருக்கிறது.

பருவநிலை மாற்றம் மீது மனிதர்கள் விளைவித்த மோசமான இந்த தாக்கம், யதார்த்தமான உண்மை என்று ஐபிசிசி குழுவின் இணை தலைவர் வெலரீ மெஸ்ஸன் டெல்மோட் கூறியிருக்கிறார்.

பசுங்குடில் வாயு வெளியேற்றம் காரணமாக, பூமி 1.5 டிகிரி வெப்பமாக உயரும்போது கடலின் வெப்பம் ஒரு டிகிரி கூடுதலாக அதிகரிக்கும் என்றும் 42 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் முடிவுக்குள்ளாக பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு 2 டிகிரியாகலாம் என்ற கூற்றை ஒதுக்கி விட முடியாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அதே சமயம் பசுங்குடில் வாயுக்கள் வெளியேற்ற அளவை குறைக்கும் முயற்சிகளை கடுமையாக பின்பற்றினால் பூமியின் வெப்பநிலை மேலும் உயராமல் நிலையாக இருக்கலாம் என்ற புதிய நம்பிக்கையையும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

பருவநிலை மாற்றம்

அறிக்கையில் இடம்பெற்ற 5 எதிர்கால பாதிப்புகள்

அனைத்து உமிழ்வு சூழ்நிலைகளிலும் 2040க்குள் வெப்பநிலை 1850-1900 நிலைகளுக்கு மேல் 1.5C எட்டும்

ஆர்டிக் பெருங்கடல் 2050க்கு முன்பாக செப்டம்பர் மாதத்தில் ஒரு முறையாவது பனி இல்லாத நிலையை அடையும்.

1.5 டிகிரி வெப்பமயமாதல் நிலைமை நிலவும்போதும் ‘வரலாற்றில் இதுவரை ஏற்படாத வகையில் சில தீவிர பருவநிலை நிகழ்வுகள் அதிகரிக்கும்.

கடந்த காலங்களில் நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழ்ந்த தீவிர கடல் மட்ட நிகழ்வுகள் 2100ஐ உலகம் எட்டும்போது குறைந்தபட்சம் அதிக அலை சீற்றத்தை அளவிடும் இடங்களில் பாதியளவை எட்டும்.

பல பகுதிகளில் காட்டுத்தீ உள்ளிட்ட மோசமான வானிலை நிகழ்வுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பருவநிலை மாற்றம்