சவுதி அபிவிருத்தி நிதியத்துடன் இலங்கை புதிய ஒப்பந்தம்

0
213
Article Top Ad

இலங்கையின் தற்போதைய வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புச் செயன்முறையின் கீழ், சவுதி அபிவிருத்தி நிதியத்துடன் (SFD) இருதரப்பு திருத்தப்பட்ட கடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

சவாலான பொருளாதார சூழ்நிலையால், கடந்த சில ஆண்டுகளாக இலங்கை வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் இருந்த நிலையில், சவுதி அரேபியா, தடையில்லாமல் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவு வழங்கியதுடன், சலுகை அடிப்படையில் கடன்களை வழங்கி நாட்டின் ஒட்டுமொத்த கடன் சுமையைக் குறைக்கும் பணிக்குப் பங்களித்துள்ளது.

இந்நிலையில், நேற்று (14) சவுதி அபிவிருத்தி நிதியத்துடன், சவுதி ரியால் (SAR) 516,951,065.02 மதிப்புள்ள கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இலங்கை அரசின் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் சவுதி தரப்பின் சார்பில் SFD தலைமை நிர்வாக அதிகாரி சுல்தான் அப்துல் ரஹ்மான் A. அல்மர்ஷாத் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

சவுதி அரேபியாவுடன் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், இருநாடுகளுக்கிடையிலான நெருக்கமான மற்றும் நீண்டகாலத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும் என்றும், இலங்கையின் கடன் மீள்திருப்பும் பொருளாதார மீட்பும் நோக்கமுடையது என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் ஏ. அல்-மர்ஷதிற்கும் (Sultan A. Al-Marshad) இடையிலான சந்திப்பும் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

சவுதி அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதும், புதிய திட்டங்களுக்கான வாய்ப்புகளை அடையாளம் காண்பதும் இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.

சவுதி அபிவிருத்தி நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டது. அரச சேவைகளை மிகவும் வலுவாகவும் செயற்திறனுடனும் செயல்படுத்துவதில் முக்கியமான டிஜிட்டல் மயமாக்கலில் அதிக கவனம் செலுத்த நிதியம் உடன்பாடு தெரிவித்தது.

சவுதி அபிவிருத்தி நிதியத்தால் இலங்கையில் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கைக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதில் சவுதி அரேபியா வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

புதிய திட்டங்களுக்கு சவுதி அரேபிய அபிவிருத்தி நிதியத்தால் வழங்கப்படும் உதவிகளை, மக்களின் முக்கிய தேவைகளை அடையாளம் கண்டு அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.