பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக விசாரணையின்றி சிறையிலிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாண சிவில் சமூக அமைப்புகள் இணைந்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளன.
யாழ். செல்வா மண்டபத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதை, சட்டவிரோத தடுப்புக்காவல், மற்றும் நீண்டகால விசாரணையில்லா சிறை வாழ்வு தொடர்பாக, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கடும் விமர்சனங்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
“விடுதலை மரங்கள்” எனும் பெயரில் எதிர்வரும் ஜூலை 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான முன்னோடி நிகழ்வாக இந்தக் கூட்டம் இடம்பெற்றது. இது, இலங்கை சிறைகளில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூரும் நாளாகவும், இன்னும் சிறையில் வாடும் பலருக்கான நீதிக்கான போராட்டமாகவும் அமையவுள்ளது.
அரசியல் மாற்றம் மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு பின்னரும், PTA சட்டம் இன்னும் தமிழர்களை குறிவைக்கும் ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என இதன்போது பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
இந்நிகழ்வின் போது, எட்டு மாவட்டங்களில் “விடுதலை மரங்கள்” நடுவதற்கான வேலைத்திட்டமும் அறிவிக்கப்பட்டது. இது, நீண்டகாலமாக சிறைகளில் இருக்கும் கைதிகளின் துயரத்தைக் குறிப்பதோடு, தங்களுக்காக மக்கள் இன்னும் காத்திருக்கின்றனர் என்பதை நினைவூட்டும் சின்னமாகவும் அமையும்.

