தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலத்தை உடனடியாக காலி செய்யுமாறு தையிட்டி திஸ்ஸ ரஜ விஹாரையின் தலைமை பிக்கு ஜிந்தோட்ட நந்தரம்மாவிற்கு, வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் எஸ். சுகிர்தன் எழுத்துப்பூர்வ கடிதத்தை அனுப்பியுள்ளார். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலகத்துக்கு வந்த முறைப்பாட்டின் அடிப்படையில், அங்குள்ள பௌத்த விகாரை வளாகத்தில் மேலும் அங்கீகாரம் இல்லாமல் புதிய கட்டிடங்கள் எழுப்பப்படுவதாக தெரியவந்தது. இந்நிலையில், அந்த நிலம் தொடர்பான உரிமை ஆவணங்களை வழங்குமாறும், இல்லாவிட்டால் தாமதமின்றி வெளியேறுமாறும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடத்தினை பார்வையிட்ட குழுவினர், அங்கு ஒரு புதிய கட்டிடத்திற்கான அடித்தள வேலைகள் நடந்து வருவதாகக் கண்டறிந்தனர். ஆனால் இதற்கான அனுமதிப் பணிகள் எந்தவொரு அதிகாரப்பூர்வ முறையிலும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலத்தில் நடைபெறும் கட்டுமானம், அனுமதியின்றி மற்றும் அங்கீகாரமின்றி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அதுகுறித்து விளக்கமும் கோரப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் இடம்பெறும் நில அபகரிப்பு தொடர்பாக பொதுமக்கள் ஏற்கனவே பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

