IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி : ஐந்தாவது மதிப்பாய்வு 2025 செப்டம்பரில்

0
185
Article Top Ad

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

இந்தத் தகவலை, சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கோசெக், நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை பலப்படுத்தப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எனினும், உலகளாவிய சந்தைப் பதட்டம், நிதி மற்றும் கொள்கை சார்ந்த நிச்சயமற்ற தன்மைகள், நாட்டின் பொருளாதாரப் பாதையைப் பாதிக்கும் அபாயங்களை ஏற்படுத்தக்கூடும்,” என அவர் தெரிவித்தார்.

இவ் மதிப்பாய்வின்போது, நிலவும் உலகளாவிய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் மீதான முழுமையான மதிப்பீடு மேற்கொள்ளப்படும் என்றும், அதற்கான கலந்துரையாடல்கள் இலங்கை அரசாங்கத்துடன் தொடரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முந்தைய நான்காவது மதிப்பாய்வு 2025 ஜூலை 1ஆம் திகதி நிறைவுசெய்யப்பட்டதாகவும், அதன் பயனாக இலங்கைக்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம், இத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதி 1.74 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

மேலும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மூலமாக, பணவீக்கம் குறைதல், வருவாய் சேகரிப்பு உயர்வு மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு வலுப்பெறுதல் ஆகியவையும், நாட்டின் நிதி நிலைப்பாட்டுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“2024 ஆம் ஆண்டு, நெருக்கடியைப் பிந்தைய கட்டத்தில் 5% வரையான பொருளாதார வளர்ச்சி இலங்கை அடைய முடிந்துள்ளது. இது IMF திட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் செயற்பாடுகள் பலனளிக்கின்றன என்பதை வலியுறுத்துகிறது,” என ஜூலி கோசெக் சுட்டிக்காட்டினார்.