செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை கோரி யாழில் போராட்டம்

0
186
Article Top Ad

யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. செம்மணி வளைவுப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில், வடக்கு கிழக்கு சமூக இயக்கம் தலைமையிலான பல பிரமுகர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் சமூக உறுப்பினர்கள் இணைந்துகொண்டனர்.

தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரும் பன்னாட்டு சுதந்திர நீதிப் பொறிமுறையின் அவசியம் குறித்து இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இலங்கை நீதிமன்ற அமைப்பின் கீழ் நடைபெறும் அகழ்வாராய்ச்சிகளில் முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்த முடியாது என்பதையும், விடயத்தை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து, கையெழுத்து பெறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி புதைகுழிகள் – அச்சுறுத்தும் உண்மைகள்

செம்மணியில் தொடரும் தடயவியல் அகழ்வாராய்ச்சிகளில் அதிர்ச்சி தரும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுவரை குழந்தைகள் உட்பட குறைந்தது 90 பேரின் மனித என்புத்தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்ட என்புத் தொகுதிகளுடன், ஒரு குழந்தையின் பால் புட்டி மற்றும் பல சிறுவர்களின் எலும்புகளும் அடங்கும். தற்போது இந்த இடம் “தடயவியல் அகழ்வாராய்ச்சி தளம் எண். 01” மற்றும் “தளம் எண். 02” என அழைக்கப்படும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேல் அகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

1990களில் யாழ்ப்பாண தீபகற்பத்தில் இலங்கை இராணுவம் ஆக்கிரமித்த காலத்தில், இலங்கை இராணுவம் குற்றச்செயல்களின் தடயங்களே இந்த மனிதப் புதைகுழி என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்று வருகின்றது.

குறிப்பாக யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து எவ்வித விசாரணைகளோ அல்லது நடவடிக்கையோ எடுக்கப்படாத நிலையில், இந்த மனிதப் புதைகுழி பற்றிய உண்மைகளை கண்டறிய பன்னாட்டு நீதித் தலையீடு அவசியம் என ஆர்வலர்களும், பாதிக்கப்பட்ட சமூகத்தினரும் குரல் எழுப்பி வருகின்றனர்.