ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கம் – பல இடங்களை சுனாமி தாக்கியது

0
189
Article Top Ad

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் 8.7 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்ததாவது, நிலநடுக்கம் கம்சட்கா பகுதியில், நிலத்துக்குக் கீழே சுமார் 19.3 கிலோமீட்டர் ஆழத்தில், கிழக்குத் தென்கிழக்காக 125 கிலோமீட்டர் தூரத்தில் நிகழ்ந்தது.

இந்த நிலநடுக்கத்தினையடுத்து, ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் சுனாமி பேரலைகள் கடல் கரையை தாக்கியுள்ளன. பசிபிக் கடல் வரையிலான பல நாடுகளுக்கு, அதாவது ரஷ்யா, ஜப்பான் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்து, மக்கள் உயரமான இடங்களுக்கு அவசரமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுனாமி அலைகள் சில இடங்களில் 4 மீட்டர் உயரம் அளவுக்கு எழுந்துள்ளன. இதனால் மின்சாரம் மற்றும் தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன, மக்கள் பீதியில் வீதிகளில் தாறுமாறாக ஓடும் காணொளிகள் பதிவாகியுள்ளதோடு, வீட்டுக்கூரைகளில் ஏறி நிற்கின்றனர்.

அலாஸ்கா, ஹவாய், கலிபோர்னியா, ஓரிகான் மற்றும் வொஷிங்டன் பகுதிகளுக்கு தேசிய சுனாமி எச்சரிக்கை மையமும் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்ய துறைமுக நகரமான செவெரோ-குரில்ஸ்கை மூன்று சுனாமி அலைகள் தாக்கியுள்ளன, அவற்றில் கடைசியாக துறைமுக உள்கட்டமைப்பை சேதப்படுத்தியது மற்றும் பல நங்கூரமிட்ட கப்பல்களை ஜலசந்திக்குள் இழுத்துச் சென்றது என டாஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

சேத விபரங்கள் குறித்த முழுமையான தரவுகள் இன்னும் வெளியாகவில்லை.