குரில் தீவுகள் நிலநடுக்கத்துக்குப் பின்னர் ரஷ்யாவில் சுனாமி அச்சம்: மக்களை கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

0
213
Article Top Ad

ரஷ்யாவின் கம்சட்கா தீவுப்பகுதியில் இன்று (03) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து, கடலோர பகுதிகளில் சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பசுபிக் பெருங்கடலில் பாரிய அலைகள்  கண்காணிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கம்சட்கா சுனாமி கண்காணிப்பு மையம் வெளியிட்ட தகவலில், “அலூஷியன், உஸ்ட்-கம்சாட்ஸ்கி மற்றும் Petropavlovsk-Kamchatsky ஆகிய மாவட்டங்களில் 3 முதல் 19 சென்டிமீட்டர் உயரமுள்ள அலைகள் அடிக்கக்கூடும்” என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் மீனவர்களை கடற்கரை பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுள்ளனர். அலை உயரம் குறைவாக இருந்தாலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக கடலோரத்தைத் தவிர்க்க வேண்டும் என ரஷ்ய அவசர சேவைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சமீபத்திய நாட்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதால் மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது. கடந்த வாரம், இப்பகுதியில் 8.8 ரிக்டர் அளவிலான பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து புவியியல் இயக்கங்கள் அதிகரித்துள்ளதாகவும், க்ராஷென்னினிகோவ் எரிமலை கடந்த 600 ஆண்டுகளில் முதன்முறையாக வெடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த எரிமலை வெடிப்பு நிலநடுக்கத்துடன் நேரடி தொடர்புடையதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.