உக்ரைன் இல்லாத சமாதான ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ள முடியாது: ஐரோப்பிய தலைவர்கள் எச்சரிக்கை

0
187
Article Top Ad

உக்ரைனுக்கான ஆதரவை மீண்டும் வலுப்படுத்தியுள்ள ஐரோப்பிய நட்பு நாடுகள், ரஷ்யாவுடனான எந்தவொரு சமாதான பேச்சுவார்த்தையிலும் கியேவ் (Kyiv) பங்கெடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கூட்டு அறிக்கையானது, கடந்த வெள்ளியன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு இடையிலான சந்திப்பிற்கு முன்னதாக,  டன் சந்திக்க இருப்பதற்கு முன்னர், இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, போலந்து, பின்லாந்து மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர்களால் வெளியிடப்பட்டது.

வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் பங்கேற்கும் முத்தரப்பு சந்திப்புக்கு ட்ரம்ப் தயாராக உள்ளார். எனினும், தற்போதைக்கு, ரஷ்ய தலைவர் ஆரம்பத்தில் முன்மொழிந்தபடி, இது ட்ரம்ப்–புடின் உச்சி மாநாடாகவே திட்டமிடப்பட்டுள்ளது.

“கியேவ் இல்லாத எந்த ஒப்பந்தமும் பயனற்றது,” என்று ஜெலென்ஸ்கி எச்சரித்தார். ட்ரம்ப், முதலில் புடினை மட்டும் சந்திப்பதன் மூலம் பேச்சுவார்த்தையை தொடங்கலாம் என்று பரிந்துரைத்தாலும், புடினும் ஜெலென்ஸ்கியும் பங்கேற்கும் முத்தரப்பு சந்திப்புக்கான வாய்ப்பு இருப்பதாக அவர் நம்புகிறார்.

புடின் இதற்கு சம்மதிப்பாரா என்பது இன்னும் தெளிவாக இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக, உக்ரைன் மீது ரஷ்யா முழுமையான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்திக்கவில்லை.

மொஸ்கோவும் கியேவும் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்காக “சில பிரதேசங்களை மாற்றிக்கொள்ளும்” என்று ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை கூறினார். இதற்கு ஜெலென்ஸ்கி கடுமையாக பதிலளித்து, “ரஷ்யா செய்தவற்றுக்கு வெகுமதி அளிக்க மாட்டோம்” என்று கூறினார்.

“உக்ரைன் இல்லாத எந்த முடிவும், அமைதிக்கு எதிரான முடிவாகும்,” என்று அவர் டெலிகிராமில் பதிவிட்டார். “உக்ரைனின் நிலத்தை ‘பரிமாற்றம்’ செய்வது, ரஷ்யா போரை மீண்டும் தொடங்குவதற்கான சூழ்நிலையை மட்டுமே ஏற்படுத்தும்,” என்றும் அவர் எச்சரித்தார்.

அமெரிக்காவின் சிபிஎஸ் செய்தி நிறுவனம், கிழக்கு உக்ரைனின் டொன்பாஸ் பகுதியை முழுமையாக ரஷ்யா கைப்பற்றி, கிரிமியாவை தக்க வைத்துக்கொள்ளும் ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள ஐரோப்பிய நட்பு நாடுகளை சம்மதிக்க வைக்க வெள்ளை மாளிகை முயற்சி செய்கிறது என்று தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலாக, ஐரோப்பிய தலைவர்கள் “சர்வதேச எல்லைகள் வலுக்கட்டாயமாக மாற்றப்படக்கூடாது” என்று வலியுறுத்தி, உக்ரைன் தனது எதிர்காலத்தைத் தானே தீர்மானிக்க உரிமையுடையது என்று குறிப்பிட்டனர். தங்கள் நாடுகள், உக்ரைனுக்கு தொடர்ந்தும் ராஜதந்திர, இராணுவ மற்றும் நிதி ஆதரவுகளை வழங்கும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.