வடக்கு கிழக்கு ஹர்த்தால் பலனளிக்குமா?

0
222
Article Top Ad

முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இராணுவ காவலரணுக்கு அருகில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இன்று (18.08.2028) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் இடம்பெறவுள்ளது.

கடந்த 7ஆம் திகதியன்று முத்தையன்கட்டு பகுதியில் உள்ள 63வது படைப் பிரிவு முகாமுக்குச் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த ஐந்து பேரில் ஒருவரான 32 வயதான கபில்ராஜ் என்பவர், இராணுவத்தினரால் கடுமையாக தாக்கப்பட்ட பின்னர் காணாமல் போயிருந்தார். பின்னர் அவரது உடல் முத்தையன்கட்டு குளத்தில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டது.

இவர்கள் எதற்காக சென்றார்கள், உயிழந்த இளைஞனை கொன்று வீசினார்களா அல்லது தப்பித்து ஓடும்போது விழுந்தாரா உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு,  சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் மூன்று இராணுவத்தினரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், இந்த சம்பவத்தை கண்டித்தும் வடக்கு கிழக்கிலிருந்து இராணுவ பிரசன்னத்தை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்தமை தவறா?

ஏற்கனவே கடந்த 15ஆம் திகதி ஹர்த்தால் அறிவிக்கப்பட்டே இன்றைய தினத்திற்கு மாற்றப்பட்டது. மன்னார் மடு மாதா தேவாலய திருவிழா தினமாகிய அன்று மேற்கொள்ளப்பட்ட ஏற்பாட்டிற்கு பல்வேறு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதோடு, ஆயர் இல்லம் கண்டன அறிக்கையும் வெளியிட்டது.

மேலும், அன்று முஸ்லிம்கள் தொழுகைக்காக கடைகளை மூடும் நாளன்று ஏற்பாடு செய்கின்றமை குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இவற்றின் பின்னணியை நோக்குகையில், இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை, தேர்தலையும் கட்சியையும் இலக்காக கொண்டதென பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். கட்சி சார்பாக அல்லாமல், தமிழ் மக்கள் சார்பாக இந்த அழைப்பினை விடுத்திருந்தால் ஆதரவு கிடைக்கும் என்றும் தெரிவித்தனர்.

இழந்து போன தங்களுடைய வாக்குவங்கியை அதிகரிக்கவே கதவடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் அண்மையில் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

சில தரப்புகள் ஆதரவு மறுப்பு

ஏற்கனவே இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு இல்லையென ஏற்கனவே வவுனியா வர்த்தக சங்கம் அறிவித்துவிட்டது. வர்த்தக சங்க பிரதிநிதிகளை நேரடியாக சந்தித்து தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு கோரியிருந்த நிலையில், பின்னர் கூடிய வர்த்தக சங்கத்தினர் ஆதரவில்லை என்று தீர்மானித்தனர்.

அத்தோடு, ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர் இது குறித்து தமிழ் தேசியம் சார்ந்த அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் என்பவற்றுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருக்க வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னரேயே ஒரு முடிவுக்கு வந்து பொதுவான திகதியில் ஹர்த்தாலுக்கான அழைப்பை விடுத்திருக்க வேண்டும். இது எதுவும் இலலாமல் ஒரு கட்சியை சேர்ந்த ஒருசிலர் தன்னிச்சையாக தீர்மானம் எடுத்துவிட்டு அதற்கு ஆதரவு கோரும் பட்சத்தில் மாணவர் ஒன்றியமாகிய எம்மால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மேலும், கிளிநொச்சியில் பாடசாலைகள் வழமைப்போன்று இயங்கும் என்றும், ஒன்றரை மணித்தியாலங்கள் மட்டுமே கதவடைப்பு இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறைந்தபட்சம் காலை வேளையிலாவது கதைகளை மூடி இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெற்றிபெறுமா?

ஹர்த்தால் குறித்து பல்வேறான நிலைப்பாடுகள் காணப்படுகின்ற நிலையில், இதன் ஊடாக அரசாங்கத்திற்கு ஒரு வலுவான செய்தியை கூற வேண்டும் என்றும், அனைவரும் அதனை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் சுமந்திரன் கூறியுள்ளார்.

இவ்வாறான ஒரு ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அது தோல்வியடையும் பட்சத்தில், அது ஒட்டுமொத்த பார்வையில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு கிடைத்த தோல்வியாகவும் பார்க்கப்படும் ஆபத்துண்டு என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் என்ன கூறுகின்றது?

நாட்டில் எந்த பகுதியில் இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கை அல்ல என்றும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ நேற்றை ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவத்தின் உண்மைகளைத் திரித்து, தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் சில அரசியல் குழுக்கள் வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாகத் தெரிகிறது என்று அவர் குற்றஞ்சாட்டியதோடு, விசாரணைகள் இடம்பெற்று வருவதால் நாட்டு மக்கள் உண்மைகளைப் புரிந்துகொண்டு அமைதியான முறையில் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவற்றிற்கு மத்தியில் இடம்பெறும் இந்த ஹர்த்தால், உண்மையில் மக்களின் எதிர்ப்பை பிரதிபலிக்கும் பொதுமக்கள் இயக்கமாக மாறுமா அல்லது அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்ட கட்சிசார் முயற்சியாகவே பார்க்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரவிருக்கும் தேர்தல் சூழ்நிலை, அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் மக்களின் பங்கேற்பு ஆகியவை, இன்றைய ஹர்த்தாலின் வெற்றி தோல்வியை மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் போராட்டங்களுக்கு உருவாகும் பாதையையும் தீர்மானிக்கும் வகையில் அமையும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

செய்தியாக்கம் கே.கே.