வித்தியா கொலை விவகாரம் : மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்

0
105
Article Top Ad

கடந்த 2015ஆம் ஆண்டு புங்குடுதீவில் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வித்தியா தொடர்பான வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்ட பிரதிவாதிகள் செய்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும்  நவம்பர் 6ஆம் திகதி குறித்த மனுக்களை விசாரிப்பதாக இன்று (25) உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த மேன்முறையீட்டு மனுக்கள் பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சலா வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய நீதியரசர்கள் அடங்கிய அமர்வில் இன்று அழைக்கப்பட்டன. பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி, நீதிமன்றத்தில் சாட்சியங்களையும் முன்வைத்து, வழக்கின் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பெற நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டதாக குறிப்பிட்டார். இதனால், குறுகியகால திகதியிலே மேன்முறையீட்டு விசாரணையை நடத்துமாறு கோரி நீதிமன்றத்தில் மனு சமர்ப்பிக்கப்பட்டது.

இதனடிப்படையில், குறித்த மனுக்கள் நவம்பரில் விசாரணைக்கு வரவுள்ளன.

வித்யா கொலை வழக்கில் சுவிஸ் குமார் என்பவர் உள்ளிட்ட 7 பேருக்கு, கடந்த 2017 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.