ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 வது அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், இதில் கலந்துகொள்ளும் பொருட்டு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (7) ஜெனீவா சென்றுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் விசேட அறிக்கையொன்றை முன்வைக்கும் பொருட்டு அவர் ஜெனீவா சென்றுள்ளார்.
இதன்போது ஏனைய நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளதோடு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்-உடன் விசேட சந்திப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பின்னர் முன்னெடுக்கப்படும் மனித உரிமை சார்ந்த முன்னேற்ற விடயங்கள் தொடர்பாக, இந்த அமர்வில் அறிக்கையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, அமர்வுக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கு, ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் பதிலளித்துள்ளதோடு, மனித உரிமைகள் பேரவையின் 57/1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

