முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட இல்லங்கள் குறித்து அரசாங்கம் விளக்கம்

0
350
Article Top Ad

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட இல்லங்கள் முழுமையாக ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவற்றின் சந்தை பெறுமதியை மதிப்பீடு செய்து பொருளாதார ரீதியாக உற்பத்தி நோக்கங்களுக்குப் பயன்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் பரிசீலிப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ குடியிருப்புகள் உள்ளிட்ட விசேட சலுகைகளை ரத்து செய்யும் புதிய சட்டத்தை அரசாங்கம் அண்மையில் அமுல்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளின் சொத்துக்கள் மீளப்பெறப்படுகின்றன.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், சில முன்னாள் ஜனாதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகும் பல தசாப்தங்களாக அரச இல்லங்களில் வசித்து வந்ததாகவும், சிலரின் குடும்பங்கள் தலைமுறை தோறும் அங்கு வாழ்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக, ஒருவர் 31 ஆண்டுகள் அரசாங்க வீடுகளில் வாழ்ந்துள்ளார். மற்றொருவர் 1984 முதல் 2015 வரை அமைச்சராகவும், பின்னர் ஜனாதிபதியாகவும் அரச குடியிருப்பைப் பயன்படுத்தியுள்ளார். இது அரசியல் கலாசாரத்தில் முரண்பாடாக மாறியுள்ளது என  அமைச்சர் கூறினார்..

இந்நிலையில் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம், தற்போதைய ஜனாதிபதிக்கும் பதவிக்காலம் முடிந்த பின் பொருந்தும் என்றும், மக்கள் விருப்பத்துக்கு இணங்க அரசாங்கம் இந்த மாற்றத்தை செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.