கொரோனாவிற்கு மத்தியிலும் தொடரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கண்ணீர்க் கதை

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கியநாடுகளின் செயற் குழுவில் உலகிலேயே அதிகளவான காணாமலாக்கப்பட்டோர் பதிவான நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. 1980களில் இருந்து அனைத்து சமூகங்களையும் சேர்ந்த 60 ,000 முதல் 100000 வரையானவர்கள் இலங்கையில் காணாமலாக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

0
429
Article Top Ad
காசிப்பிள்ளை குடும்பத்தினர் பெரியமடுவிலுள்ள தமது வீட்டில் கரிசனையோடு அமர்ந்திருக்கும் காட்சி- படம் அருண் ஆரோக்கியநாதன்
வானுயர் மரங்கள், கருமேகம் சூழ்ந்த  வானம், பழங்கள் நிறைந்த தோட்டம் எனப்பசுமையான  பின்னணியில்  அமைந்துள்ள தனது இல்லத்தில்  கலங்கிய கண்களுடன் அமர்ந்திருக்கின்றார் தளையசிங்கம் காசிப்பிள்ளை ( வயது 60).  புளியங்குளத்தில் இருந்து முல்லைதீவு செல்லும் வழியில் அமைந்துள்ள வளமான பெரியமடுப்பிரதேசத்தில் அமைந்திருக்கின்றது அவரது வீடு.
இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தாலும் தனது ஆசை மகள் ஜெரோமி உடன் இல்லாததை நினைக்கும் போதெல்லாம் காசிப்பிள்ளையின் கண்கள் பனிக்கின்றன.

‘யுத்தம் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலம் அது. உணவைப் பெறுவதில் நாம் மிகவும் கஷ்டத்தை எதிர்கொண்டிருந்தோம். எனது மகள் நீண்ட நேரம் எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. உணவு வாங்கிவாருங்கள் அப்பா என்று என்னிடம் கேட்டார். நான் வாங்கிவந்து கொடுத்தேன். ஆனால் அவர் எதுவும் சாப்பிடவில்லை. பின்னர் அவர்கள் வந்து எம்மிடமிருந்து பலவந்தமாக அவளை தூக்கிச்சென்றனர்.’

தனது மகளுடன் இருந்த கடைசித்தருணங்களை நினைத்து தேம்பித்தேம்பியழுகின்றார் காசிப்பிள்ளை.
காசிப்பிள்ளையின் குடும்பம் போன்று பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக இன்னமும் ஏங்கிக்கொண்டும் நீதிக்காக இடைவிடாது போராடிக்கொண்டும் இருக்கின்றனர்.
 
 போர், அரசியல், வன்முறை இன்ன பிற காரணங்களால் உலகம் முழுவதும் காணாமல் ஆக்கப்பட்ட பல லட்சக்கணக்காணோர் பற்றிய தகவல்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் ஓகஸ்ட் 30-ம் திகதியை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக ஐ.நா. கடந்த 30.08.2011 அன்று பிரகடனப்படுத்தியது.
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கியநாடுகளின் செயற் குழுவில் உலகிலேயே அதிகளவான காணாமலாக்கப்பட்டோர் பதிவான நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.
1980களில் இருந்து அனைத்து சமூகங்களையும் சேர்ந்த 60 ,000 முதல் 100000 வரையானவர்கள் இலங்கையில் காணாமலாக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச மன்னிப்புச்சபை அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் பாதிப்பிற்குள்ளானவர்களில் பலரும்  அரசாங்க பாதுகாப்புப் படையினரால்  கடத்திச்செல்லப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அல்லது பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியைக் கோருவதோடு இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கடைபிடித்து வருகின்றனர்.
இலங்கையின் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்த நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பலர் பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்தனர். மேலும்  பலர் பலவந்தமாக பிடித்துச்செல்லப்பட்டனர். பதவியில் இருந்த அரசாங்கங்களால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தீவிரமாக எதிர்த்து கருத்துகளை வெளியிட்ட செய்தியாளர்கள்,  மனித உரிமை ஆர்வலர்கள் .,மதகுருமார் எனப்பல்வேறு தரப்பட்டோரும் அடங்குவர்.
யுத்தத்திற்குப்பின்னர்  பதவியில் இருந்த அரசாங்கங்கள்  காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதியை கண்டறிவதற்காகவெனக் கூறி ஆணைக்குழுக்களையும் அலுவலகங்களையும் அமைத்தபோதும்
இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்தாகவோ உறுதி செய்யப்படவில்லை.
இம்மாத முற்பகுதியில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டினேஸ் குணவர்த்தன காணாமலாக்கப்பட்டதாக கூறப்படுபவர்களில் பலரும் இரகசியமான முறையில் வெளிநாடுகளில் வாழ்ந்துவருவதாக ஆதாரமெதனையும் முன்வைக்காது கருத்துவெளியிட்டிருந்தார். இப்படி அரசாங்கத்தரப்பினர் கூறுவது முதன்முறையன்று பிரதீப் எக்னெலிகொட விடயத்திலும் முன்னதாக இவ்வாறாக அரசாங்கத்தரப்பினர் கருத்துவெளியிட்டிருந்தனமை சுட்டிக்காட்டத்தக்கது.
2009ம் ஆண்டு குடும்பத்தினரின் கண்முன் பலவந்தமாக கொண்டுசெல்லப்பட்ட காசிப்பிள்ளை ஜெரோமியின் புகைப்படம் அவரது வீட்டில்
காசிப்பிள்ளையின் மனைவி ஜெயவனிதா, வவுனியாவைத் தளமாகக் கொண்ட தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவியாகவும் திகழ்கின்றமை  குறிப்பிடத்தக்கது

“2015ம் ஆண்டு மார்ச ஜனவரி 4ம் திகதி நல்லாட்சி அரசாங்கத்தின் நூறுநாள் திட்டத்தை விளக்கும் பத்திரிகையில்  இருந்த புகைப்படத்தில் எனது மகளும் பாடசாலை சீருடையுடன் இருப்பதைக் கண்டேன். அதன்பின்தான் தொடர்ச்சியாக இடைவிடாமல் சுழற்சி முறையிலான போராட்டத்தை 2015 பெப்ரவரி 24ம்திகதி ஆரம்பித்து இன்னமும் நடத்திவருகின்றோம்”

என்றார் ஜெயவனிதா
2009ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் திகதி பலவந்தமாக பிடித்துச்செல்லப்பட்ட தனது மகள் ஜெரோமியைக் கண்டுபிடிப்பதற்காக   இடைவிடாத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காசிப்பிள்ளை ஜெயவனிதா கொடிய கொரோனாவால் கூட தமது போராட்டத்தை முடக்கியவிடமுடியாது என்கிறார்.

 “வவுனியா நகரில் கொட்டில் அமைத்து சுழற்சிமுறையில் இடைவிடாமல் காணாமற் போனோருக்கு நீதிகோரும் போராட்டத்தை நாம்  முன்னெடுத்துவருகின்றோம்.  தற்போது 1650 நாட்களைக் கடந்து எமது போராட்டம் பயணிக்கின்றது. கொரோனா முடக்க காலத்தில் கொட்டிலுக்கு அருகே ஏ-9 வீதியில் நான் தங்கியுள்ள வீட்டில் இருந்தவாறே போராட்டை முன்னெடுக்கின்றோம். கொரோனா அல்ல வேறு எந்தக்கொடூரம்  நிகழ்ந்தாலும் நீதி கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடமாட்டோம்”

கோட்டாபய  ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்றதைத் தொடர்ந்து பதவிக்கு வந்த அரசாங்கம் காணாமல் போனோர் விடயத்திலும் ஏனைய விடயங்கள் போன்று கொரோனாவை காரணமாகக் காண்பித்து கவனத்தை திசைதிருப்ப முயற்சிக்க எண்ணினாலும்  ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கியநாடுகள் மனித உரிமை அமர்வுகளுக்காக கண்துடைப்பிற்காக தற்போது காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் மூலம்  நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஜெயவனிதா (52 வயது) தெரிவித்தார்.

“இப்போது காணாமல்போனோர் அலுவலகத்தினூடாக கடிதங்களை அனுப்பி உங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற விபரங்களைக்கேட்கின்றனர். நாங்கள் பரணகம ஆணைக்குழு முதல் பல இடங்களுக்கும் விபரங்களை ஏற்கனவே கொடுத்துவிட்டோம். இது இவர்கள் எதிர்வரும் ஜெனிவா அமர்வை சமாளிக்கிறதற்கு செய்து வேலையேதவிர இதயசுத்தியுடனான செயல் அல்ல’

என தனது அதிருப்தியை வெளியிட்டார்.
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின்
பொதுச் செயலாளராக உள்ள கோபாலகிருஷ்ணன் ராஜ்குமார் ஐக்கியநாடுகள் சபை அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் இந்தியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய சர்வதேசத்தின் அழுத்தத்தினூடாக ஏற்படுத்தப்படும் சர்வதேச பொறிமுறை ஊடாகவே தமது பிரச்சனைக்கு தீர்வு காணப்படமுடியும் என்பதில் உறுதியாக உள்ளதாகக் கூறினார்.

” நல்லாட்சி அரசாங்கத்தின் போது காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டபோது  காணாமலாக்கப்பட்டோர் எனப் பெயரைக்கூட மாற்றமுடியாது என்றனர். 2017ல் அவர்களுடன்  பேச்சுநடத்தியபோது எவ்வாறு எமது போராட்டத்தை தடுத்துநிறுத்துவது என்பதிலேயே முனைப்பாக இருந்தனர்.ஆனால் தற்போதுள்ள அரசாங்கம் ஜெனிவாவை சமாளிப்பதற்காக அந்த அலுவலகத்தினூடாக யார் இந்தஅலுவலகம் வேண்டாம் அதனை ஏற்கவில்லை என்று சொன்னார்களோஅந்த தாய்மாருக்கே கடிதங்களை அனுப்பி விபரம் கேட்கின்றது. அதில் ஒரு இடத்தில் காணாமல்போனோர் தொடர்பாக பொலிஸாரின் கடிதம் கோரப்பட்டுள்ளது. பொலிஸிடம் சென்றால் காணாமல் போனாதாக உறுதிப்படுத்த முடியாது .வேண்டுமானால் இறந்துவிட்டதாக பதிவிடமுடியும் என்று  கூறுவதாக தாய்மார் என்னிடம் முறையிட்டுள்ளனர் “

இது அரசாங்கத்தின் நோக்கத்தை அம்பலப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எப்படியேனும் எம்முடன்  தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கின்றோம் என கண்துடைப்பு நாடாகமாடவே இந்த செயற்பாடுகளை இவர்கள் முன்னெடுக்கின்றார்கள் மாறாக உண்மையாக நீதிவழங்கும் நோக்கம் எள்ளளவிலும் இல்லை என்கிறார் ராஜ்குமார்.
1650 நாட்களுக்கு மேலாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஜெயவனிதா தலைமையிலான காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். கொரோனா முடக்க காலத்தை தவிர ஏனைய நாட்களில் வவுனியா நகர மத்தியிலுள்ள கொட்டிலில் இருந்தே போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது
கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக மனைவி ஜெயவனிதா வவுனியா நகரில் அதிகமாக தங்கியிருந்து  இடைவிடாமல் போராடிவரும் நிலையில் வீட்டில் சமையல் செய்வது முதற்கொண்டு பிள்ளைகளைப் பராமரிப்பது தோட்ட வேலைபார்ப்பது என பல்வேறு பணிகளையும் சளைக்காமல் மேற்கொண்டுவரும் காசிப்பிள்ளை எப்படியேனும் தனது மகள் மீளக்கிடைத்துவிடுவாள் என்ற நம்பிக்கை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

‘ நல்ல தீர்வு வரும் என்று நான் உணர்கின்றேன். எந்தவொரு தாய்க்கோ தந்தைக்கோ இந்த நிலை வந்துவிடக்கூடாது. எனது மனைவி கடந்த 4 வருடங்களுக்கு மேலாக வீட்டில் இல்லை. போராட்ட இடத்தில் மகளுக்கு நீதி கிடைப்பதற்காக இருக்கின்றார்.  எனது மகளுக்காக அவர் அங்கிருப்பதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.  அவர் தலைவியாக இருப்பதையிட்டும் மகிழ்ச்சியடைகின்றேன்.  அவர் எனது மகளை மீண்டும் கொண்டுவருவார்’

என நம்பிக்கை வெளியிட்டார் காசிப்பிள்ளை.
மனைவி வீட்டில் இருந்து வெகுதூரத்தில் வவுனியாவில் தங்கியிருந்த போராட்டத்திற்கு தலைமை தாங்குவது குறித்து அச்சமில்லையா என்று வினவியபோது கண்களில் தெளிந்து கருத்துவெளியிட்ட காசிப்பிள்ளை,

‘ இல்லை இல்லை நான் எவ்வகையிலும் அச்சப்படவில்லை.  ஒரு பிள்ளைக்காக தாயின் உயிர் பறிக்கப்பட்டால் பறிக்கப்படட்டும்.  தற்போது நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. ஒரு தீர்வுகிடைக்குமானால் இன்னமும் இரண்டு மூன்று ஆண்டுகள் சென்றாலும் பரவாயில்லை. நானும் கூட வவுனியாவில் போராட்டம் நடைபெறும் கொட்டிலுக்கு வாரமொரு தடவை ( கொரோனா முடக்கத்திற்கு முன்) செல்வேன்.  நான் காலைசென்று மாலையிலேயே திரும்புவேன். அந்தக்கொட்டிலில் அமர்ந்திருக்கும் போது நான் மகிழ்ச்சியாக உணர்வேன். சில வேளை என் மகளைக் காண்பது போல உணர்வேன். சிலவேளை இப்போது   மகள் எங்கே இருக்கிறார் என்ன செய்கிறார் என கவலையில்  மூழ்கிடுவேன்.’

என்றார் கனத்த குரலில் காசிப்பிள்ளை.
 காசிப்பிள்ளை போன்று கதிகலங்கி நிற்கும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு  கண்துடைப்பு நாடாகங்களை விடுத்து உண்மையான தீர்வைப் பெற்றுக்கொடுக்க  அதிகாரத்திலுள்ளவர்கள் முன்வரவேண்டும்
ஞாயிறு வீரகேசரிக்காக அருண் ஆரோக்கிநாதன் எழுதிய இந்தக்கட்டுரை குளோப் தமிழ் இணையத்தளத்தில் மேலதீக தகவல்களுடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது.