எதிர்வரும் ஜுன் மாதத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை இன்று செய்திவெளியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் புதன்கிழமை முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு எதிர்நோக்கியுள்ள கொரோனா நிலைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ள அதேவேளை புதிய அரசியல்யாப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில் மாகாண சபைமுறையை தொடர்பாக என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பாக தீர்மானிக்கப்படவேண்டியுள்ளதாக அரசாங்கத்திலுள்ள சில தரப்புக்கள் தமது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியுள்ளன.
கட்டம்கட்டமாக தவணைக்காலங்கள் 2018ம் ஆண்டில் நிறைவுற்ற நிலையில் நாட்டிலுள்ள 9 மாகாண சபைகளும் தற்போது மத்திய அரசாங்கத்தின் கீழே செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் தேர்தல் முறைமையை மாற்றியமைக்குத் தீர்மானித்த நிலையில் எல்லைநிர்ணய நடவடிக்கை தாமதமானதால் மாகாணசபைத் தேர்தல் தாமதமாகியது.
புதிய தேர்தல் முறைமையின் கீழோ பழைய தேர்தல் முறைமையின் கீழோ தேர்தலை நடத்த வேண்டுமாயின் தற்போதுள்ள சட்டத்தில் மாற்றம் செய்வதன் மூலமாகவே சாத்தியமாகும்