கனடா–இந்தியா வர்த்தக உறவுகள் மீளெழுச்சி: பல ஆண்டுகால பதற்றத்திற்கு பின் உறவுகளை சீராக்க முயற்சி

0
265
Article Top Ad

இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை மீண்டும் வலுப்படுத்த கனடா விரும்புவதாக அந்நாட்டு சர்வதேச வர்த்தக அமைச்சர் மணிந்தர் சித்து தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக நீடித்துவரும் தூதரகப் பதற்றத்திற்குப் பின்னர், இரு நாடுகளும் உறவுகளை புதுப்பிக்க முனைவதாக அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலை நியூ டெல்லியில் சந்தித்ததாகவும், வான்வழிப் போக்குவரத்து, செயற்கை நுண்ணறிவு, முக்கிய தாதுக்கள், ஆற்றல், வேளாண்மை போன்ற துறைகளில் இணைந்து செயற்படக் கூடிய வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடியதாகவும் சித்து தெரிவித்தார். இந்தியாவுக்கு அவர் மேற்கொண்டிருக்கும் மூன்று நாள் பயணத்தின் பகுதியாகவே இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

2023-இல் கனேடிய சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலைக்கான குற்றச்சாட்டைத் தொடர்ந்து இரு நாடுகளின் தூதரக உறவுகள் மோசமடைந்த நிலையில், இது இரு நாடுகளுக்கிடையேயான மிக உயர்மட்ட வர்த்தகம் தொடர்பான சந்திப்புகளில் ஒன்றாகும். அப்போது கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜரின் படுகொலையில் இந்திய அரசின் பங்கு குறித்து நம்பகமான தகவல்கள் உள்ளதாக கூறியிருந்தார். இந்தியா இந்த குற்றச்சாட்டைத் தீவிரமாக மறுத்தது. இதையடுத்து இரு நாடுகளும் தத்தமது தூதர்களை வெளியேற்றியதுடன், இந்தியா கனடாவில் விசா சேவைகளையும் நிறுத்தி வைத்தது.

எனினும், ட்ரூடோவுக்கு பின் பிரதமர் மார்க் கார்னி ஆட்சிக்கு வந்ததும், புதிய உறவுகளை உருவாக்க இந்தியாவுடன் மீண்டும் பணியாற்றி வருகிறார். இவ்வாண்டின் தொடக்கத்தில் அல்பெர்டாவில் நடைபெற்ற G7 மாநாட்டின் அரங்கில் கார்னி மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துக்கொண்டதோடு, புதிய உயர்ஸ்தானிகர்களை நியமிப்பதற்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் ஒப்புக் கொண்டனர்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த கடுமையான சுங்க வரிகள் காரணமாக உலக பொருளாதார அச்சம் அதிகரித்துள்ள சூழலில், கனடா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் புதிய உடன்படிக்கைகள் குறித்து ஆர்வம் காட்டுகின்றன.