சம்பள உயர்வுக்கு தடையா? – பொகவந்தலாவ, மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு

0
50
Article Top Ad

பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ள 200 ரூபாய் சம்பள உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டதை கண்டித்து, இன்று (16) பொகவந்தலாவயிலும் மஸ்கெலியாவிலும் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை உயர்த்துவது குறித்து அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஆனால், இந்த ரூ.200 கொடுப்பனவு சட்டவிரோதமானது என கூறி, அதை வழங்குவதைத் தடுக்க எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாகத் தோட்டத் தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

பொகவந்தலாவ நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, தொழிலாளர்கள் ஒரு சவப்பெட்டியை ஏந்தி ஊர்வலமாகச் சென்று, சில எதிர்க்கட்சியினரின் புகைப்படங்களையும் உருவப் பொம்மைகளையும் எரித்தனர். மேலும், எதிர்ப்பு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் கூறுகையில், அரச நிதியை மோசடி செய்து நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்களே பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வை எதிர்க்கிறார்கள். வரலாற்றில் ஒருபோதும் போராட்டங்களோ வேலைநிறுத்தங்களோ இல்லாமல், தற்போதைய அரசாங்கம் சம்பள உயர்வை வழங்க முன்வந்துள்ளது. இதை எதிர்ப்பதற்கோ அல்லது இதுகுறித்து கருத்து தெரிவிப்பதற்கோ எதிர்க்கட்சியினருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று தெரிவித்தனர்.