நிலையான விவசாயத்தின் மூலம் பசுமை பொருளாதார வளர்ச்சிக்கு புதிய திட்டம்

0
43
Article Top Ad

“எக்ரிகிரீன் முன்முயற்சி – நிலையான விவசாய நடைமுறைகள் மூலம் பசுமை பொருளாதார வளர்ச்சி” திட்டத்தின் கீழ், ஒரு புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு, இறப்பர் அபிவிருத்தி திணைக்களம் மற்றும் இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் கூட்டுப் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் 8 மில்லியன் யூரோ மானியத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகளை ஊக்குவித்து, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பசுமை பொருளாதார வளர்ச்சிக்கான இலங்கையின் மாற்றப் பயணத்திற்கு இந்த முயற்சி ஆதரவளிக்கிறது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, இறப்பர் துறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி பிரிவுகளில் அதிகமான நிலைத்தன்மையும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வும் கொண்ட விவசாய நடைமுறைகளுக்கு மாறுவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த மானிய ஒப்பந்தத்தில், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியபெருமவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவின் ஒத்துழைப்புத் தலைவர் ஜோஹன் எச். ஹெஸ்ஸேயும் கையொப்பமிட்டனர்.

இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்புமிக்க ஆதரவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்ததுடன், சந்தை சார்ந்த மதிப்பு கூட்டல், ஏற்றுமதி சந்தைகளுடன் மேம்பட்ட ஒருங்கிணைப்பு உள்ளிட்ட இலங்கையின் நிலையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரலுடன் இந்தத் திட்டம் நெருக்கமாக ஒத்துப்போகிறது என்றும் குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தம் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமிடையிலான வலுவான, நீடித்த கூட்டாண்மையின் வெளிப்பாடாக அமைவதுடன், பசுமை பொருளாதார வளர்ச்சி, நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகள், உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான இரு தரப்புகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.