இலங்கை மத்திய வங்கியின் 2026 கொள்கை அறிக்கை: பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை நோக்கிப் புதிய பயணம்

0
74
Article Top Ad

2025 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பல்வேறு உலகளாவிய மற்றும் உள்நாட்டு சவால்களுக்கு மத்தியிலும், இலங்கை தனது பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் சுமார் 4 முதல் 5 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது

2025 இன் பிற்பகுதியில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளி (Cyclone Ditwah) பெருமளவிலான உயிர்ச் சேதங்களையும் சொத்துச் சேதங்களையும் ஏற்படுத்திய போதிலும், நாட்டின் பொருளாதாரம் இத்தகைய அதிர்ச்சிகளில் இருந்து மீண்டெழும் திறனைப் பெற்றுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்

நுகர்வோர் விலைவாசி உயர்வை (பணவீக்கம்) 5 சதவீத இலக்கில் பேணுவதற்கு மத்திய வங்கி தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும். 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பணவீக்கம் இந்த இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் இறுதியில் நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளில் பதிவான மிக உயர்ந்த அளவாகும்.

நிதித்துறையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறைகள் பலப்படுத்தப்படும்

என்றும், குறிப்பாக, வங்கிகள் இலாபகரமான காலங்களில் மூலதனத்தைச் சேமித்து வைத்து, நெருக்கடி காலங்களில் பயன்படுத்த உதவும் எதிர்ச் சுழற்சி மூலதன இடையக (CCyB) கட்டமைப்பு 2026 இல் அமல்படுத்தப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) 22 மில்லியன் கணக்குகளுக்கான சேவைகளை விரைவுபடுத்த ‘ஒரே மின்-அமைப்பு’ (One e-system) மற்றும் காகிதமற்ற பணிச்சூழல் உருவாக்கப்படும். சர்வதேச மட்டத்தில், 2026 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) பரஸ்பர மதிப்பீடு இலங்கைக்கு மிக முக்கியமானதாகும். இதில் தோல்வியடைந்து நாடு மீண்டும் ‘சாம்பல் பட்டியலில்’ (Grey list) இடம்பெற்றால், அது வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களைப் பாதிக்கும் என்பதால், இதனைத் தவிர்க்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தரவு சார்ந்த முடிவுகளை எடுக்க ஏதுவாக, ‘மத்திய தரவு செயலாக்கம் மற்றும் பகுப்பாய்வு அமைப்பு’ (CDPAS) நிறுவப்படவுள்ளது. இது சிதறிக்கிடக்கும் தகவல்களை ஒரே இடத்தில் சேமித்து, கொள்கை வகுப்பிற்கு உதவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.