மூத்த ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் காலமானார்

0
60
Article Top Ad

இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான புகழ்பெற்ற கட்டுரையாளருமான இக்பால் அதாஸ், தனது 81ஆவது வயதில் காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார். அவரது உடல், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இன்று (13) காலை 9.00 மணி முதல், தெஹிவளை ஹில் ஸ்ட்ரீட், சிறிவர்தன வீதி 11/C என்ற இலக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகள் இன்று பின்னர் தெஹிவளை கிராண்ட் மஸ்ஜித் மையவாடியில் நடைபெறவுள்ளன.

இராணுவ மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் முன்னணி கட்டுரையாளராகக் கருதப்பட்ட இக்பால் அதாஸ், தனது கூர்மையான செய்தியறிக்கைகளின் மூலம் சர்வதேச அளவில் பெரும் மதிப்பைப் பெற்றிருந்தார். 2000ஆம் ஆண்டு தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, அவரை “இலங்கையின் முன்னணி இராணுவ செய்தியாளர்” என வர்ணித்திருந்தது.

தனது ஊடகப் பணிக்காலத்தில் பல்வேறு சர்வதேச விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். 1994ஆம் ஆண்டு, பத்திரிகையாளர்களைக் காக்கும் குழுவினால் (Committee to Protect Journalists) வழங்கப்படும் சர்வதேச பத்திரிகைச் சுதந்திர விருதை அவர் பெற்றார். அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியிலும் பத்திரிகைச் சுதந்திரத்திற்காக அவர் காட்டிய தைரியத்திற்கான அங்கீகாரமாக இந்த விருது வழங்கப்பட்டது.

மேலும், 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தொடர்பான CNN செய்தி ஒளிப்பரப்பில் அவர் வழங்கிய பங்களிப்பிற்காக, 2007ஆம் ஆண்டு Alfred I. duPont – Columbia University விருதும் வழங்கப்பட்டது.