அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசாவிற்கான தனது சமாதான சபை (Board of Peace) முன்முயற்சியில் பங்கேற்க கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு வழங்கப்பட்டிருந்த அழைப்பை வாபஸ் பெற்றதாக அறிவித்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ட்ரம்ப் இந்த புதிய முன்முயற்சியை தொடங்கி வைத்தார். போர் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா பிரதேசத்தை நிர்வாக மாற்றக் காலத்தில் மீளமைப்பதே இதன் நோக்கமாக கூறப்பட்டுள்ளது.
சுமார் 35 நாடுகள் இந்த பேரவையில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கனடா இதில் சேருமா என்பது குறித்து மார்க் கார்னி இதுவரை அதிகாரப்பூர்வ முடிவை அறிவிக்கவில்லை. டாவோஸில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில் கார்னி பங்கேற்கவில்லை; அதற்குப் பதிலாக அவர் குவெபெக் நகரில் நடைபெற்ற அமைச்சரவை முகாமின் முதல் நாளில் கலந்துகொண்டிருந்தார்.
இந்நிலையில், ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், கார்னிக்கான அழைப்பு வாபஸ் பெறப்படுவதாக ட்ரம்ப் தெரிவித்தார். “இதுவரை எந்த காலத்திலும் அமைக்கப்படாத மிகப் பெருமைமிக்க தலைவர்களின் பேரவையில் கனடா இணைவதற்கான அழைப்பு திரும்பப் பெறப்படுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முன்முயற்சியில் இஸ்ரேல், துருக்கி, எகிப்து, சவூதி அரேபியா, கத்தார் போன்ற முக்கிய மத்திய கிழக்கு நாடுகள் இணைந்துள்ளன. ஆனால் ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அழைப்பை நிராகரித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபைச் சாசனத்திற்கு முரணான அம்சங்கள் இருப்பதாக பிரான்ஸ் கவலை வெளியிட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு பிரதேசத்தின் நிர்வாகத்தை கண்காணிக்கும் பேரவையை ட்ரம்ப் மேற்பார்வையிடுவது குறித்து மனித உரிமை நிபுணர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் முன்பே சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைனில் முழுமையான படையெடுப்புக்குப் பிறகு சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள புடின், இந்த முன்முயற்சியில் சேர்வதை பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
பேரவையில் நிரந்தர இடம் பெற நாடுகள் 1 பில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடா இதற்காக பணம் செலுத்த திட்டமில்லை என நிதியமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பேன் ஏற்கனவே கூறியிருந்தார்.
டாவோஸ் உரைகளுக்குப் பிந்தைய பதற்றம்
டாவோஸில் இரு தலைவர்களும் வழங்கிய உரைகளுக்குப் பிறகே இந்த அழைப்பு வாபஸ் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. தனது உரையில், உலகின் “பெரும் சக்திகள்” பொருளாதார ஒருங்கிணைப்பை ஆயுதமாக பயன்படுத்துகின்றன என கார்னி விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்த ட்ரம்ப், “அமெரிக்காவுக்கு கனடா நன்றி கூற வேண்டும்” என கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த கார்னி, “கனடா அமெரிக்காவால் வாழவில்லை. நாம் கனடியர்கள் என்பதால்தான் கனடா செழிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
இந்த இரு தலைவர்களுக்கிடையிலான வாக்குவாதம், இந்த ஆண்டு இறுதியில் கனடா–அமெரிக்கா–மெக்ஸிகோ வர்த்தக ஒப்பந்தம் (CUSMA) மீளாய்வு செய்யப்படவுள்ள சூழலில் ஏற்பட்டுள்ளது.

