’13’ ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துக கோட்டாபயவிடம் ஷ்ரிங்லா வலியுறுத்து இந்தியத் தூதரகம்அறிக்கை

0
209
Article Top Ad

அரசமைப்பின் 13 ஆவது அரசமைப்பு திருத்தத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய வௌியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நடைபெற்ற சந்திப்பின்போது இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது என இந்திய வௌியுறவு செயலாளரின் இலங்கைப் பயணத்தை அடுத்து, இலங்கைக்கான இந்தியத் தூதரகம் நேற்று  விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் உள்ள விடயங்கள் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், 13 ஆவது திருத்தத்துக்கு  அமைய அதிகாரப் பரவலாக்கலை உறுதி செய்யும் வகையில் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் எனவும் கோட்டாபய ராஜபக்சவிடம் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்திருந்தார் எனவும் இலங்கைக்கான இந்தியத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச மற்றும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆகியோருடனான சந்திப்பின்போதும் அரசமைப்பின் 13ஆவது திருத்தம், அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் இந்திய வௌியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா முக்கிய கவனம் செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.