ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து என்னை வெளியேற்றவே முடியாது! – டயனா கமகே வீறாப்புப் பேச்சு

0
173
Article Top Ad

“மழைக்கு ஒதுங்குவதற்காக எனது வீட்டில் இடமளித்த போது, வீட்டுக்குள் வந்தவர்கள் நான் இல்லாத நேரத்தில் வீட்டுத் திறப்பை மாற்றி அவர்களின் வீடு என்று கூறி என்னை வெளியேற்ற முயற்சிக்கின்றனர். நான் இந்தக் கட்சியில் பொம்மை இல்லை. கட்சியின் உரிமையாளர் என்ற உறுப்பினராக இருக்கின்றேன்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தான் நீக்கப்பட்டுள்ளார் என்று வெளியாகும் செய்தி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சமகால பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே  இவ்வாறு தெரிவித்த  டயனா கமகே மேலும் கூறுகையில்,

“ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் என்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் எனக் கூறியதாகத் தெரிவித்து ஊடகவியலாளர்கள் என்னிடம் கேட்டனர். அப்படியொன்றும் நான் அறியவில்லை என்று அவர்களுக்கு பதிலளித்தேன். உண்மையிலேயே கட்சியின் செயலாளர் உள்ளிட்டோர் வெட்கப்பட வேண்டும். என்னைப் பற்றி தீர்மானம் எடுக்கும்போது எனக்குத் தெரியாது ஊடகங்களுக்கு கூறுகின்றீர்கள். ஆனால், இந்த விடயம் கட்சியின் செயற்குழுவை சேர்ந்த சிலருக்கும்  தெரியாது.

எவ்வாறாயினும் என்னை கட்சியிலிருந்து நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுபிள்ளைகள் போன்று நடந்துகொள்கின்றனர். இந்தக் கட்சி எனது கணவரின் கட்சி. பெரும் மழையில் சிக்கியிருந்தவர்களுக்கு ஒதுங்க எனது வீட்டில் இடமளித்திருந்தேன். ஆனால், நான் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தபோது வீட்டின் திறப்பை மாற்றி, அவர்களின் வீடு என்று அதனைக் கூறுகின்றனர்.

இதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் ஒன்றைக்கூற வேண்டும். வீட்டின் உரித்து என்னிடமே உள்ளது. உங்களின் கட்சிக்குள் வேண்டியளவுக்கு பிரச்சினைகள் உள்ளன. துண்டுகளாக பிரிந்துள்ளீர்கள். உங்களின் தலைவரிடம் வேலைத்திட்டங்கள் இல்லை எனக் கட்சியினர் கூறுகின்றனர். அங்கு பல்வேறு அணிகளாகப் பிரிந்து செயற்படுகின்றனர்.

நானும், கணவரும் இந்தக் கட்சியை கொடுத்த காரணத்தினாலேயே இவர்கள் இங்கே வந்துள்ளனர். இல்லாவிட்டால் இங்கிருப்பவர்களில் அரைவாசிப் பேருக்கு ரணில் விக்கிரமசிங்க வேட்புமனுவை வழங்கியிருக்கமாட்டார். இவர்களில் பலர் இங்கு இருக்கமாட்டார்கள்.

நான் இந்தக் கட்சியில் பொம்மை இல்லை. இப்போதும் உறுப்பினரே. கட்சியின் உரிமையாளர் என்ற உறுப்பினராக இருக்கின்றேன். சஜித் பிரேமதாஸ போன்று என்னைப் பொம்மையாக்க வேண்டாம். அப்படி நான் நடந்துகொள்ள மாட்டேன். எனது மனச்சாட்சிக்கு இணங்கவே அரசுக்கு ஆதரவளிக்கும் தீர்மானங்களை எடுத்தேன். இதன்படி தொடர்ந்தும் தீர்மானம் எடுப்பேன்” – என்றார்.