ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழி போர், முடிவுக்கான எந்த சமிக்ஞையும் இன்றி நேற்று (02) லெபனானுக்கும் பரவி இருப்பதோடு ஹிஸ்புல்லா அமைப்பின் ரொக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் அங்கு நடத்திய சரமாரித் தாக்குதல்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்வதோடு பதிலடியாக ஈரான் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் கொண்டு இஸ்ரேல், வளைகுடா நாடுகள் மற்றும் தொலைதூரத்தில் சைப்ரஸில் உள்ள பிரிட்டன் விமானத் தளத்தின் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கடந்த சனிக்கிழமை (28) ஆரம்பமான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரானுக்கு எதிரான நடவடிக்கையின் அனைத்து நோக்கங்களும் பூர்த்தி செய்யப்படும் வரை ஓயாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வீடியோ அறிவிப்பில் குறிப்பிட்டிருந்நதார்.
‘தற்போது போர் நடவடிக்கை முழு பலத்துடன் முன்னெடுக்கப்படுவதோடு எமது அனைத்து நோக்கங்களும் எட்டப்படும் வரை தொடரும். எமது நோக்கங்கள் மிக வலுவானவையாகும்’ என்று டிரம்ப் சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஆறு நிமிட வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம் அமெரிக்காவுடன் நாம் பேச்சவார்த்தை நடத்தப்போவதில்லை என்று ஈரானின் உயிர் பாதுகாப்புச் சபையின் செயலாளர் அலி லரிஜானி அறிவித்திருக்கும் நிலையில் இந்தப் போர் விரைவில் முடிவொன்றை காண்பதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. அமெரிக்காவுடன் அணுத் திட்டம் குறித்து புதிய பேச்சுவார்த்தைக்கு முயல்வதாக அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட அறிவிப்பை நிராகரித்தே லரிஜானி எக்ஸ் சமூகதளத்தில் இதனைத் தெரிவித்தார்.
இந்நிலையில் ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 555 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஈரானிய செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது. ‘எமது நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் சியோனிச – அமெரிக்காவின் பயங்கரவாதத் தாக்குதல்களில் இதுவரையில் 131 நகரங்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு 555 பேர் உயிரிழந்திருப்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்றோம்’ என்று அந்த மனிதாபிமான அமைப்பு டெலிகிராம் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி கமனே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை மேலும் மேலும் அதிகரித்துள்ளது. தெற்கு ஈரானில் பாலர் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட குறைந்தது 175 பேரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குகின்றனர். குறிப்பாக ஈரானின் சனநெரிசல் மிக்க நகரங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

லெபனானுக்கும் பரவியது
ஈரான் உயர்மட்டத் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வடக்கு இஸ்ரேலின் ஹைபா இராணுவத் தளம் ஒன்றின் மீது லெபானின் ஹிஸ்புல்லா அமைப்பு ரொக்கெட் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து லெபனான் தலைவர் பெய்ரூட்டில் இஸ்ரேல் குண்டு வீச்சுகளில் 30இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பில் இருந்து லெபனான் மற்றும் அதன் மக்களை பாதுகாத்து உயர்மட்ட தலைவரின் படுகொலைக்கு பழிதீர்க்கும் வகையில் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று அறிவித்தது.
இதனையடுத்து இஸ்ரேல் நடத்தி பதில் தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டு மேலும் 149 பேர் காயமடைந்ததாக லெபனான் அரச ஊடகமான தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது சூடு நடத்தியதற்காக ஹிஸ்புல்லா அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ், அந்தக் குழுவின் செயலாளர் நாயகம் நயீம் கசம் தற்போது படுகொலைக்கான இலக்காக மாறியுள்ளார் என்றார். கசமை எச்சரித்த காட்ஸ், ‘கமனேவின் வழியை பின்பற்றும் யாராக இருந்தாலும் தோல்வி அடைந்த தீய குழுவிடன் நரகத்தில் ஆழத்தில் சேர்ந்துகொள்வார்கள்’ என்றார்.
லெபனான் அரசில் இருந்து சுதந்திரமாக இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பின் இராணுவ மற்றும் அரசியல் தலைவர்கள் 2014 இஸ்ரேலுடனான போரின்போது கொல்லப்பட்ட நிலையில் தற்போது பலவீனம் அடைந்துள்ளது. இந்நிலையில் அந்த அமைப்பால் இஸ்ரேலுக்கு எந்த வகையான பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று உறுதி செய்ய முடியவில்லை. எனினும் ஹிஸ்முல்லா அமைப்பின் இந்தத் தாக்குதல் இந்தப் போரை முழு அளவிலான பிராந்திய போராக உருமாற்றும் அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பின் இராணுவ மற்றும் பாதுகாப்புச் செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக லெபனான் பிரதமர் நவாப் சலாம் அறிவித்துள்ளார். ஹிஸ்புல்லாவின் செயற்பாடுகள் சட்டவிரோதமானது என்றும் லெபனான் நிலப்பகுதியில் இருந்து நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலையும் தடுப்பதற்கு பாதுகாப்பு படையினருக்கும் உத்தரவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிசக்தி நிலைகளும் இலக்கு
இதேவேளை பிராந்தியத்தில் ஈரானின் தாக்குதல்கள் நேற்று மேலும் தீவிரம் அடைந்திருப்பதோடு வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலைகளை இலக்கு வைத்தும் தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளது. கட்டாரின் ராஸ் லபான் மற்றும் மைசயீதின் தொழில்துறை நகரங்களில் எரிசக்தி நிலைகள் மீது இரு ஆளில்லா விமானங்கள் விழுந்ததாக கட்டார் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உலகின் முன்னணி இயற்கை வாயு உற்பத்தி நாடான கட்டார், தனது திரவ இயற்கை வாயு மற்றும் அது சார்ந்து உற்பத்திகளை நிறுத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மறுபுறம் சவூதி அரேபியாவின் ராஸ் தனூராவில் உள்ள அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இலக்கு வைத்து இரு ஆளில்லா விமானத் தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாக சவூதி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த இரு ஆளில்லா விமானங்களும் இடைமறிக்கப்பட்டது என்று அமைச்சின் பேச்சாளர் துர்கி அல் மலிகி, அல் அரபியா செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இடைமறிப்பினால் அதன் பாகங்கள் விழுந்து தீ பரவியுள்ளது. அந்தத் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் எண்ணெய் விநியோகத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் சவூதி அரேபிய வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பஹ்ரைன் மற்றும் டுபாயிலும் நேற்று வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஈரானுடனான போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் எஃப்-15 போர் விமானங்கள் மூன்றை குவைட் வான் பாதுகாப்பு அமைப்பு தவறுதலாக சுட்டிவீழ்த்தி இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது. விமானத்தில் இருந்த அனைத்து வீரர்களும் பாதுகாப்பாக வெளியேறியதாகவும் அது தெரிவித்தது.
ஈரானின் செயற்பாடுகள் மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ‘ஆபத்தான தீவிரமடைவாக மாறியுற்றது’ என்று ஆறு வளைகுடா நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. ‘பொதுமக்கள் மற்றும் போரில் ஈடுபடாத நாடுகளை குறிவைப்பது, நிலைத்தன்மையை பாதிக்கும் பொறுப்பற்ற நடத்தையாகும்’ என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சைப்ரஸின் மத்தியதரைக்கடல் தீவில் உள்ள பிரிட்டன் இராணுவத் தளத்தின் மீதும் ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. முன்னச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தளத்தில் இருந்து குடும்ப உறுப்பினர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
டெல் அவிவில் இருக்கும் இஸ்ரேலிய அரச வளாகம் ஒன்று அதேபோன்று ஹைபாவில் உள்ள பாதுகாப்பு மற்றும் இராணுவ நிலைகள் மீது ஏவுகணைகளை வீசியதாக ஈரான் புரட்சிக் காவல் படை நேற்று தெரிவித்தது. கிழக்கு ஜெரூசத்திலும் தாக்குதல் நடத்தியதாக அது கூறியது. இஸ்ரேலின் ஷெமஷ் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஈரானின் ஏவுகணை தாக்குதலில் 100 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதோடு ஈரானின் தாக்குதல்களில் இஸ்ரேலில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
மறுபுறம் ஈரானுக்கு எதிரான படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் கொல்லப்பட்ட அமெரிக்க படை வீரர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்திருப்பதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. இதில் மூவர் கொல்லப்பட்டு மேலும் ஐவர் படுகாயம் அடைந்திருப்பதாக நேற்று முன்தினம் கூறிய நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தவிர, ஈரான் பிராந்தியத்தில் நடத்தி வரும் தாக்குதல்களில் ஈராக்கில் இருவர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் மூவர், குவைட் மற்றும் பஹ்ரைனில் தலா ஒருவர் கொல்லப்பட்டிருப்பதோடு கட்டார் மற்றும் ஓமானில் பலர் காயமடைந்துள்ளனர்.
லெபனானில் உள்ள குடிமக்கள் உடனடியாக வெளியேறவும் – அமெரிக்கா
லெபனானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று தமது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ள அமெரிக்கா, அங்கிருக்கும் தமது பிரஜைகளை, உடனடியாக வெளியேறுமாறும் வலியுறுத்தியுள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் லெபனானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
ஏற்கனவே நாட்டில் உள்ளவர்கள் வணிக விமான விருப்பங்கள் இருக்கும் வரை லெபனானை விட்டு வெளியேறுங்கள் என்றும் அது வலியுறுத்தியுள்ளது, சமூக ஊடகப் பதிவொன்றின் ஊடாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
லெபனானில் பாதுகாப்பு நிலைமை நிலையற்றதும் கணிக்க முடியாததும் ஆகும். நாடு முழுவதும், குறிப்பாக தெற்கு, பெக்கா மற்றும் பெய்ரூட்டின் சில பகுதிகளில் வான்வழித் தாக்குதல்கள் நடந்துள்ளன என்றும் அத்தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டு தொடக்கிய யுத்தம், நேற்று முதல் லெபனானுக்கும் பரவலாகியுள்ள நிலையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஈரானின் ஆன்மிகத் தலைவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்குவதற்காக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று முன்தினம் இரவு முதல் இஸ்ரேலின் வடபகுதி மீது தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. அந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் லெபனானின் பல பிரதேசங்களிலும் நேற்று தாக்குதல்களை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து லெபனானிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

